Friday, May 2, 2014

எழுதுகோல்


          



பிறந்தவுடன் கண் திறந்தேன்!
பிறவி இதுவென்று உணர்ந்தேன்!
அன்புடன், அறிவையும் சுவாசித்தேன்!
அடைக்கலம் அதுவென்று அறிந்தேன்!
நிறங்களை நிமிடத்தில் கண்டு கொண்டேன்!
நிதசர்சனங்கள் இவையெல்லாம்!என்று சொன்னேன்!
கானம் பலவும் காதுடன் கேட்டேன்!
காதிலும் தேன் பாயுமென புரிந்து கொண்டேன்!
பாடும் பறவைகளுடன் பறந்தேன்!
பக்குவமான மனம் அமைய பெற்றேன்!
பச்சைப் புல்வெளியைப் பார்த்தேன்!
பகைமையில்லா மனதுடன் பரவசமாகி போனேன்!
தெய்வங்களை தரிசித்தேன்!
தென்றலெனும் வாழ்வடைந்தேன்!

நீலவானம், இரவில் சுடர்விடும் விண்மீன்கள்,
நீரின் அசைவுகள், அதில் நீந்தும் மீன்கள்,
உதிக்கும் சூரியன், அதன் புலரும் பொழுது,
உயர்ந்த மலைகள், அதை வருடும் அந்திச்செம்மை,
இரவின் இருள், அதன் குரலாய் நிசப்தம்,
இருண்ட வானம், அதன் வேராய் பெருமழை,
மரங்களுடன், மலர்கள், அதை தழுவும் மதியின் அழகு,
மதிய வெயில், அதன் இறுதியில் மாலை வேளை,
அடர்ந்த காடு, அதை குளிர்விக்கும் அருவி,
அழகிய சோலை, அதை மணக்கச் செய்யும் மலர்கள்,

இவை அனைத்தும், அழகென்று உவகையுற்றேன்!
இயற்கையின் சீதனமென்றும் தெரிந்து கொண்டேன்!     
அதிசயத்து, பலமுறை வியந்து நின்றேன்!
அற்புதமான உலகமென்றேன்! இன்னும்,
எத்தனையோ, படைப்பு கண்டேன்!
எளிதில்லை இது!!! என புரிந்து கொண்டேன்!
அள்ளக் குறையாத பல மொழிகள் பயின்றேன்!
ஆயினும் தமிழ் மேல் காதல் கொண்டேன்!

காட்சிகளின், எண்ணங்கள், தாக்கங்கள்,
கனவிலும் வந்து களிநடனம் புரிய,
கண் விரட்டும் உறக்கத்தையும்,
களைந்தெறிந்து, கற்பனையில் மிதந்திருந்தேன்!
கண்ணில் கண்டதை கவி பாடினேன்!
கதைகள் புனைந்து களிப்புற்றேன்!
காலத்தில் அதை பதித்து வைத்து,
கருத்துக்ளுக்கு காத்திருந்தேன்!
கசடுகள் நிறைந்த கவியென்றும்,
கட்டுக்கதைகள் இவையென்றும்,
கசப்புடன் காலம் சொல்லிச் செல்ல,
கனமான மனதுடன் உடல் நொந்தேன்!

இத்தனை பார்த்தும், ரசித்தும்,
இன்னும் ஏகமாய், ரசித்து பார்க்க நினைத்தும்,
மறந்து போனது ஒன்றுதான்! மற்ற,
மனிதரின் மனதை ரசிக்கவில்லை!
மமதையில்லா உள்ளம் பெறவில்லை!
மகிழ்ச்சியில், மனமது நிறைந்திட, அவர்தம்
மனவியல் படிக்கத் தவறி விட்டேன்!

எது எப்படியாயினும், இன்று வரை,
என்னுடன் உறவாடும் எழுதுகோல், என்
உறவை பிரிய மனமின்றி, தன்
உயிரையும் எனக்கு தந்தபடி, உன்
உற்றத் தோழன் நானிருக்க, உவகையான,
உள்ளத்துடன், உன் உதிரம் உலர்ந்து போகும் வரை.
உலகில், நீ ரசித்ததை, எல்லாம்
உண்மையுடன் உணர்த்தி விடு! அது
உன்னதமாகும் ஒரு நாளில்!!!! என்றது! அது
அன்புடன் சொன்னதில், அகம் குளிர்ந்து,

ஆசையாய், அதை அரவணைத்து, என்மன
ஆறா தழும்பையும், ஆற வைக்க, என்
ஆறாம் விரலாய் நீ இரு!!!! என யாசித்தேன்.......   

No comments:

Post a Comment