Tuesday, April 14, 2015

அந்த நால்வரின் மனம்.....

வானம் நிர்மலமாக, இரவின் குளிர்ச்சியை சற்றே அதிகரித்து கொடுக்கலாமா? என்று யோசித்தபடி இருந்தது. கடல், தன்னை விட்டு ஓடும் உடன்பிறப்பான அலைகளை, ”ஏய், ரொம்ப தூரம் ஓடாதே..! வந்து விடு என்று சிறு குழந்தைகளை மிரட்டும் ஒரு அன்பான தாயைப்போல்,” அக்கறையுடன் மிரட்டி, மறுபடியும் தன்னிடம் ஓடி வரும் அதனை வாரி அணைத்தபடியிருந்தன..!  நட்சத்திரங்கள், வானப் போர்வையில் நன்கு பொதிந்தபடி படுத்து கிடந்தாலும், உறக்கம் இன்னமும் தழுவாத தன் கண்களை சிமிட்டியபடியே, “இந்த மனிதர்களின் எண்ணங்களை, பார்த்தாயா? இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே..!! சத்தம் போட்டு நீ வந்து, வந்து கேட்டு விட்டு போனால் மட்டும், உன்னாலும், இவர்களை புரிந்து கொள்ள இயன்று விடுமா என்ன?” என்று சத்தத்துடன் கரைக்கு வந்து ஆர்ப்பரித்து விட்டுச் செல்லும் கடலலைகளை, கிண்டலடித்த வண்ணம், தன் வண்ணச்சுடர்களை வாரித்தெளித்தபடி வானவெளியில் மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது.

போவோமா? என்றபடி எழுந்த கார்த்திக்கை, சற்று கோபம், வெறுப்பு கலந்த ஒரு பார்வையோடு நோக்கினான் பிரபாகர்.

நான் இவ்வளவு சொல்லியும், என் தவிப்பு புரியாமல் சாதரணமாக கிளம்புகிறனே இவன்!” என்கிற மாதிரி இருந்தது அவன் பார்வை..!

பிரபா! எனக்கு உன் சூழ்நிலை நல்லாவே புரியிது! ஆனா, இது அவசரமா எடுக்க வேண்டிய முடிவில்லை! நிதானமா யோசிச்சு, நல்லமாதிரி முடிவெடுக்கனும். பொறுமையா யோசிக்கலாம்!” என்றான் கார்த்திக்.
         
பொறுமையா? பொறுமையா யோசிக்கதற்குள்ளே என் திருமணமே முடிஞ்சிடும்.! போடா! போ!” என்று சற்று படபடத்தான் பிரபாகர்.!

சரி! இப்போது உன் முடிவுதான் என்ன”?

என்னாலே அருணா இல்லாமே வாழவே முடியாது.! வாழவும் தெரியாது! என்று நாம சந்திச்ச இந்த இரண்டு நாள்லே பல ஆயிரம் தடவை உங்கிட்டே சொல்லியாச்சு.! மறுபடியும் என் முடிவை கேட்கிறே?” மீண்டும் சற்று கோபப்பட்டான் பிரபா.

நீ அருணாவிடம் சொன்னாயா? இதில் அவங்க என்ன சொன்னாங்க? என்று கேட்ட கார்த்திக்கிடம், இல்லை! அவளிடம் எதுவும் சொல்லவில்லை! விஷயம் இவ்வளவு சீக்கிரம் முன்னேறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! எப்படி அவளிடம் இதைப்பற்றி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை! என்று வேதனையுடன் ௬றினான் பிரபாகர்.

சரி! நீ முதல்ல எழுந்திரு!” என்றபடி நண்பனின் கையை பற்றி எழுப்பி அவனை சாமாதானபடுத்தும் எண்ணத்துடன் அவன் தோளை பற்றி அணைத்தவாறு, மணலில் கால் புதைய மெள்ள நடத்திச்சென்றான் கார்த்திக்.
     
வெளிநாட்டில் நல்ல வேலையில், கை நிறைந்த ஊதியத்துடன் கால் பதித்துக்கொண்ட கார்த்திக், தன் திருமணத்தை முடித்து விட வேண்டி அவசரப்படுத்தும், பெற்றோர் சொல்லை தட்ட முடியாமல், கொஞ்ச நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தவன், தன்னுடன் கல்லூரி இறுதியாண்டு வரை படித்து, பின் அவ்வளவாக தொடர்பு இல்லாமல் போன, பிரபாகரை, யதேச்சையாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றான்.        பழைய நட்பில் இருவருமே தங்களை மறந்து, ஒருவரையொருவர் பற்றிய தகவல்களை பறிமாறிக்கொண்டதில், பிரபாவின் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தக்க தீர்வை குறித்து இருவரும் இரு தினங்களாக யோசனையுடன், ஒரு முடிவுக்கும் வர இயலாது, குழம்பியபடி சுற்றிக்கொண்டிருந்தார்கள்.     
              
பிரபா! நா ஒன்னு சொல்கிறேன். நீ பேசாமல், உன் வீட்ல உனக்கு பேசி முடித்திருக்கிறார்களே! அந்தப்பெண்! அவங்க பேரென்ன? …..சங்கவி! அவங்களை,…..என்று ஆரம்பித்த கார்த்திக்கை இடைமறித்த பிரபாகர்………
  
அவங்களையே திருமணம் செஞ்சிட்டு பேசாமே, வாழ்க்கையை கழிக்கலாங்கிறியா?” வருத்தத்திலும் நக்கலாக கேட்டான்

அட இல்லப்பா! நா சொல்லறதை முழுசாத்தான் கேளேன்! அவங்களை தனியா ஒரு இடத்திற்கு வரச்சொல்லி, உன் பிரச்சனையை அவங்ககிட்டே மனம் விட்டு பேசிப் பாரேன். நல்லபடியா, புரிந்து கொள்ளும் பக்குவமான பொண்ணாயிருந்தா, உன் பிராப்ளம் சால்வ் ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு! ட்ரைபண்ணி பாரேன்!”
  
வேறே வம்பே வேண்டாம்! நீ போகாத ஊருக்கு வழி சொல்றே! அதெல்லாம் நடக்கிற காரியமா? நீ உங்க ஊர் பொண்ணுங்க மாதிரி நினைச்சிட்டு சொல்றே! இங்கெல்லாம் அப்படியில்லை! அவங்ககிட்டே நான் சொல்லறதை, உடனே தன் வீட்ல சொல்லிட்டுத்தான் மறு வேலை பாப்பாங்க!

இல்லே! எனக்கு என்னவோ இது சரியா வரும்,னு தோணுது! நீ சொல்றதை வச்சு பாக்கும் போது அந்த பொண்ணு, கொஞ்சம் புரிஞ்சிக்கிற டைப்பாதான் படுது. முயற்சி பண்ணி பாரேன். உன் வேண்டுகோள் பலிச்சா சரிதானே! அழுத்தமான குரலில் கார்த்திக் ௬றியதும், பிரபாகருக்கும் மனதில் சிறிது நம்பிக்கை ஊற்று கண் திறந்தது.
   
சரி! நாளைக்கு அவங்களுக்கு ஃபோன் பேசி வரவழைச்சி அவங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கிற பார்க்லே மீட் பண்றேன்.! உம்பேச்சை நம்பிதான் இந்த முடிவுக்கு ஒத்துக்கிறேன்.!” என்றான் பிரபாகர் சிறிது தயக்கத்துடன்.

கவலைப்படாதே! எல்லாம் நல்லபடியா நடக்கும்! நாம இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு சந்திச்சு பேச முடியாதுன்னு நினைக்கிறேன். எங்க வீட்டிலே இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே பொண்ணு பாக்கற வைபவத்துக்கு எங்க அப்பா அம்மா ரெடியாயிட்டு இருக்காங்க! நான் லீவு முடிஞ்சு கிளம்பறதுக்குள்ளே, என் மேரேஜை முடிச்சிட்டா, நல்லதுன்னு பேசிட்டிருக்காங்க! அவங்க விருப்பத்தை என்னாலையும் தட்ட முடியலே!” பேசிக்கொண்டிருந்த கார்த்திக்கை, இடைமறித்த பிரபா, ”உனக்கென்னப்பா,! வீட்டின் கடைக்குட்டி! உனக்கு மூத்த அண்ணனுக்கும் அக்காவுக்கும் லைப் செட்டில் ஆயிடிச்சு! அடுத்து உனக்குத்தான்! நீயும் நாடு விட்டு கண் காணமே போய் உக்காந்திருக்கே! ரெண்டாவது நீ இந்த காதல் மேட்டர்லே, இன்னமும் மாட்டிக்கிலே! அப்படியெல்லாம் ஒன்னு ஆறதுக்கு முன்னாடி உனக்கு ஒரு மேரேஜை செஞ்சு அனுப்பிடலாமுன்னு, பாக்கிறாங்க! சரிதானே! என்றான்.
     
நூறு சதவீதம் சரி! எனக்கு என் அப்பா, அம்மா விருப்பந்தான் முக்கியம்! எனக்கும், லவ்வுக்கும் ரொம்ப தூரம்! ஒருவேளை என் வருங்கால மனைவியை, எனக்குன்னு வந்த பின் லவ் பண்ணுவேனோ என்னவோ? என்று சொல்லி சிரித்தவனை சற்று கடுப்புடன் பார்த்தான் பிரபாகர்.
      
சரி! வா, உன்னை வீட்டுலே டிராப் பண்ணிடறேன்! நீ நாளைக்கு அவங்கிட்ட பேசிட்டு நல்ல பதிலா எனக்குச்சொல்லு! நானும் நல்லதொரு பதிலுக்கு வெயிட் பண்ணறேன். என்றபடி பிரபாவை காரில் ஏறச் சொல்லி காரை ஸ்டார்ட் செய்தான் கார்த்திக்.

தொடரும்……

10 comments:

  1. Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கு நன்றி. அவசரமில்லை! நிதானமாக படித்து கருத்திடுங்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கடல் அலை வர்ணனை ஜோர்!

    ஆஹா..... கார்த்திக் அருணாவைப் பெண் பார்க்கப் போகிறான் போலத் தோணுதே!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      பெரும்பாலும் கதைகள் காலங்காலமாய் சுற்றி வளைத்து ஒன்றை தொடுபவையாகத்தான் அமைந்து விடுவது இயற்கை. (அதுவும் பழைய பாணி கதைகள் கேட்கவே வேண்டாம்.) இதில் அனுமானிப்பது என்பது நம்மோடு பிறந்த ஒன்றல்லவா..

      தொடர்வதற்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. மனதில் டிராப் செய்யாமல் இருந்தால் சரி...!

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், புத்தாண்டு நல்வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. தொடக்கவுரை அருமை அருணா பிரபாவுக்கு செட் ஆகுறது போலத்தோனுதே.. நல்லதே நடக்கும் என நம்புவோம் எல்லாம் (பதிவர்) எழுதியபடிதான் நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் மீள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், தொடக்கவுரை அருமை என்ற பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      \\ நல்லதே நடக்கும் என நம்புவோம். //
      ஆம்! நம்பிக்கைதானே அனைத்திற்கும் ஆதாரம்.

      \\ எல்லாம் (பதிவர்) எழுதியபடிதான் நடக்கும்.//
      எழுதியதை பொறுமையாக படிக்க வைப்பதும் ( மற்ற பதிவர்களை ) ஆண்டவன் எழுதியபடிதானே நடக்கும். வேறு வழி ?
      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.


      Delete
  5. வணக்கம்

    கதையின் நகர்வு மிக அருமையாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை.. அதை படித்த பின்புதான் முழுமையாக விளங்கி கொள்ள முடியும்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      தொடர்கிறேன் சகோதரரே. தொடர்ந்து படித்து கருத்திடுவதற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete