Tuesday, May 29, 2018

கன்னி, ஆனால் தாய்.

அனைவருக்கும் என்அன்பான வணக்கம்...

இதுவும் நான் 1976 - ல் எழுதியதுதான். அப்போது எனக்கு கதைகள் எழுதுவதில் நிறைய ஈடுபாடு இருந்தது. நிறைய கதைகள் வெறும் தாளில் எழுதி வைத்திருந்தேன். .என் திருமணத்திற்கு பின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எழுத்தில் கருத்து செலுத்த இயலவில்லை. பத்திரிக்கைகளில் வெளியிட விரும்பவும் இல்லை. அப்படியே வெளியிட அனுப்பி வைத்தாலும்  நான் எழுதியவை ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயப்பாடுதான் காரணம்.

குழந்தைகள் உதவியுடன் கணினி செயல் பாட்டை கற்றுக் கொண்டு வலைத் தளத்திற்கு வந்த பின்னும் எப்போதேனும் கதைகள் எழுதுகிறேன். ஆனால் அதையே இங்கு பதிவிட்டவுடன் அனைவரும் வந்து படித்து பாராட்டும் போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. ஆகையினால் 1976-ல் எழுதியவைகளையும் அவ்வப்போது இங்கு பதிவிட்டு அதற்கு வரும் உங்களின் அன்பான கருத்துரைகளை கண்டு மிகுந்த  சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் பதிவிடுகிறேன். இது அப்போதைய கருக்கள் ஆனபடியால் அந்த கால சூழலுக்கு தக்கபடிதான் கதையின் போக்கும், எழுத்தும் இருக்குமென்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகளுடன்..
உங்கள் சகோதரி ..


கன்னி, ஆனால் தாய்.

"ன்னை ஏன் காப்பாற்றினீர்கள்?" அவள் விம்மினாள்.


"என் நிலையில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். தவிர,இன்னும் சில மாதங்களில் இந்த உலகைக்காண ஆவலோடு இருக்கும் ஒரு ஜீவனைக்கொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது", அமைதியாக கேட்டாள் நிர்மலா.

"அவமான சின்னத்தை சுமந்து கொண்டிருக்கும் என்னால் உங்களுக்கு ஏன் அவப் பெயர் வரவேண்டும், அதனால்தான் கேட்கிறேன், இந்த அநாதையை என்னை ஏன் காப்பாற்றினீர்கள் என்று?", அவள் கலங்கிய குரலில் கேட்டாள்.

"உன் பெயர் என்ன?"என்று நிதானமான குரலில் கேட்டாள் நிர்மலா. 

"நளினா", முணுமுணுப்பாக பதில் வந்தது அவளிடமிருந்து.



"இதோ பார் நளினா!, அநாதைகளுக்கு அநாதைதான் இடம் தரவேண்டும், இதோ பார் நானும் ஒரு அநாதைதான்.... முப்பது வருடங்களை மலை போல் முழுங்கி விட்டு ஒரு தைரியமான பெண்ணாய் நிற்கவில்லையா! இந்த உலகில் தனியே வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கு தைரியந்தான் தேவை.. அதுசரி, நீ இந்த நிலைமைக்கு வர காரணம் என்னம்மா?" பரிவுடன் அவள் தலையை தடவி விட்டவாறு கேட்டாள் நிர்மலா.



"தயவு செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள், உங்கள் பரிவான பேச்சினால் என் மனதிலுள்ள காயம் சற்று ஆறிப்போயிருக்கிறது. அதை மீண்டும் கிளறி விடாதீர்கள்", என்று விம்மினாள் நளினா.



"ஸாரி நளினா,  இனிமேல் நீ என் உடன் பிறவா சகோதரி உனக்கு எப்போது உன் கதையை சொல்ல தோணுகிறதோ அப்போது கூறலாம், நான் உன்னை வறுப்புறுத்த மாட்டேன். நீ இங்கு என்னுடன் தைரியமாக தங்கலாம், இது இனி உன்னுடைய வீடு மாதிரி நினைத்து கொள். நான் உன்னை என் காலம் உள்ள வரை காப்பாற்றுவேன், கவலைபடாதே!" என்று உருக்கமான குரலில் கூறிய நிர்மலா அவளை அன்போடு கட்டியணைத்துக் கொண்டாள்.



"நளினா, உன் கனவில் கூட இனி தற்கொலை எண்ணம் வரக்கூடாது, தெரிகிறதா?" அன்புடன் கூறியபடி லேசாக அவள் கண்ணத்தை தட்டினாள் நிர்மலா.

சரி, என்கிற மாதிரி இருந்தது நளினாவின் தலையசைப்பு.....

"குட் கேர்ள்" பாராட்டி விட்டு அவ்வறையை விட்டு அகன்றாள் நிர்மலா..

சோம்பல் ஒன்றை விடுத்தபடி படுக்கை யிலிருந்து எழுந்தாள் நிர்மலா. தினமும் கண்விழித்தவுடன் காப்பியுடன் நிற்கும் நளினாவை  காணவில்லை. நளினா அவளுடன் தங்கியிருக்க சம்மதித்தது நிர்மலாவுக்கு சந்தோஷத்தை தந்தது அவள் கூறியபடி உடன்பிறந்த தங்கையை விட ஒரு படி மேலாகவே நளினாவை கவனித்துக் கொண்டாள்.

ஐந்தாறு மாதங்களில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான நளினா, நி்ர்மலாவின் அன்பான அரவணைப்பில் நலம் பெற்று, தன்வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படுத்திய நிர்மலாவிடம் அளவு கடந்த அன்பை பொழிந்து அவளை தன் தெய்வமாகவே கருதி வாழ்ந்து வந்தாள். நிர்மலா எவ்வளவோ தடுத்தும் வீட்டு வேலைகளை அவளே பொறுப்பெடுத்து ஏற்றுக்கொண்டு நிர்மலாவையும், குழந்தையையும், நன்றாக கவனித்து வந்தாள்.

வழக்கப்படி இன்று கண் விழித்ததும் நளினாவை காணாததால்,  "பாவம்! வேலை மிகுதியில் இன்று கண் அசந்து உறங்குகிறாள் போலிருக்கிறது, இன்று நாம் காப்பியுடன் அவளை எழுப்பலாம்" என்று எண்ணியபடி எழுந்து பல் துலக்கி சமையலறைக்குள் நுழைந்தாள்.
பாலைக்காய்ச்சி காப்பியை கலந்து தனக்கும் நளினாவுக்குமாக கோப்பையில் ஊற்றியவள் தன்னுடைய கோப்பையை எடுத்து காப்பியை குடிக்க  ஆரம்பித்தாள்.

சில மாதங்களாக  தினமும் நளினா தயாரித்த காப்பியை குடித்த நாக்கு, இன்று சற்று வேறுபட்ட சுவைக்கு குறைகூற, மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

"என்ன இது! எவ்வளவு அயர்ந்து உறங்கினாலும் சிறிய சப்தத்திற்கு எழுந்து விடும் நளினா இன்னமும் எழுந்து வரவில்லையே? ஒருவேளை உடம்பு சரியில்லையோ?" இந்த எண்ணம் வந்ததும் மடமடவென்று நளினாவின் அறைக்கு ஒடினாள் நிர்மலா.

கட்டிலில் நளினாவை காணவில்லை, அருகிலிருந்த மரத்தொட்டிலில் ஐந்து மாதகுழந்தை ஷீலா புன்னகையுடன் உறங்கி கொண்டிருந்தாள். "ஒருவேளை வீட்டின் பின்பக்கம் போயிருக்கிறாளோ?" பதட்டத்துடன் வீடு முழுவதும் தேடினாள் நிர்மலா.

நளினாவை எங்கும் காணவில்லை. திகில் மின்னலென பாய்ந்தது நிர்மலாவின் உள்ளத்தில்... மறுபடியும் நளினாவின் அறைக்கு ஒடினாள் சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டியபோது  தொட்டில் அருகில் இருந்த டேபிளில் கடிதம் ஒன்று மேலே பாரத்தை சுமந்து கொண்டு அமர்ந்திருந்தது.

பரபரப்புடன் அதை எடுத்து படித்தாள் நிர்மலா.

"ன்பும், பாசமும், மிகுந்த என் உயிரினும் மேலான அக்காவுக்கு, எத்தனையோ நாட்களாக என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருக் கிறேன், ஏதோ ஒன்று என்னை சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தது. ஆனால் அக்கா இன்றுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் கல்லூரியில் கால் பதித்த நாட்கள். தோழிகளுடன் படிப்பும் நட்புமாக  நன்றாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது வாழ்க்கை. என் போதாத நேரம், நெருங்கிய தோழிகளுடன், ஒரு தோழி வீட்டில் தங்கி வரும் தேர்வுகளுக்கு  தயார் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது அந்த தோழி வீட்டின் எதிர் வீட்டின்  மாடியில் குடியிருந்த வாலிபன் ஒருவனிடம் சாதரணமாக தொடங்கிய நட்பு என் வாழ்க்கையை பாழாக்கியது. தேர்வுகள் முடிந்தவுடன் என் வீட்டில் எங்கள்  உறவுக்கார பையன் ஒருவனுடன் என் திருமணம் பற்றி பேச்சு வந்ததும் நான் அதிர்ந்து போனேன். என் திருமணத்தை நிறுத்த நான் செய்த முயற்சிகள்  வீணாயின.

என் நிலைமை பற்றி அவனிடம் விவாதித்த போது நாங்கள் இருவரும்  ஒருவரையொருவர் நேசிப்பதை உணர்ந்தோம். "நான்  உன்னை ராணி மாதிரி வைத்து  காப்பாற்றுகிறேன்" என்று அவன் செய்து கொடுத்த சத்தியத்தை நம்பி, பத்து மாதம் சுமந்து பெற்று அத்தனை தூரத்துக்கு ஆளாக்கிய பெற்றோர்களை உதாசீனபடுத்தி விட்டு, அவனுடன் புறப்பட்டு விட்டேன்.

இரண்டு மாதங்கள் மனம் போனபடி சுற்றி விட்டு, இங்கு வந்தபின் அவன் நண்பன் அறையில் ஒண்டி கொண்டு வாழ்க்கை பயணத்தை துவக்கிய போது திருமணத்தின் அவசியத்தை அவனிடம் அடிக்கடி உணர்த்தி கொண்டே இருந்தேன். அவனும் இன்று, நாளை,.. என நாட்களை தள்ளியதில்  மாதங்கள் ஒடியது.

ஒரு நாள் என் வயிற்றில் அவன் குழந்தையை நான் சுமப்பதை தெரிவித்ததும் திகைத்து போய், "திருமண ஏற்பாட்டை விரைவில் செய்து விட்டு வருகிறேன்" என்று போனவன், நாட்கள் பல ஓடியும் திரும்பவில்லை. கண்ணீருடன் இன்னும் சில வாரங்களை தள்ளிய போதும் அவன் வந்த பாடில்லை. முதலில் ஆறதல் கூறி என்னை தேற்றி வந்த அவன் நண்பனின் போக்கும் வரவர மாறியது.

"இவளை என் தலையில் கட்டி விட்டு அவன் தப்பித்து விட்டான், என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று தன்னுடைய மற்றொரு  நண்பனிடம் புலம்புவதையும், அதற்கு அந்த மற்றொருவன் கொடுத்த மோசமான யோஜனைகளையும், நான் கேட்க நேர்ந்ததால் என்னை அவர்கள் இல்லாத நேரம்  பார்த்து அங்கிருந்து தப்பிக்க வைத்தது.

பெற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதற்காக ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்து விட்டான் என்று எண்ணிய வருத்தத்தில் மனம் பாறையாய் கனக்க, வாழ பிடிக்காமல் சாகத்துணிந்தேன்.

அப்போதுதான் நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள். தாய் தந்தையை இழந்த நிலையிலும் நீங்கள் தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுக்காமல், நேர்மையான முறையில் வாழ்ந்து வரும் உங்களிடம் என் அவல வாழ்க்கையை சொல்ல மனம் வராமல் இதுநாள் வரை சொல்லாமல் இருந்தமைக்கு என்னை மன்னித்து விடுங்கள்.

உண்மையிலேயே, உங்களை மாதிரி நல்ல மனது உள்ளவர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லையக்கா... நம் முதல் சந்திப்பில் நீங்கள் என்னைப் பற்றி விசாரித்த போது, "அதை இப்போது கேட்காதீர்கள்", என்று நான் கேட்டுகொண்டதற்காக நீங்கள் இதுநாள் வரை என்னை பற்றி ஒரு வார்த்தை கேட்காமல், என்னை உங்கள் உடன்பிறந்த தங்கையாகவே நினைத்து என்னையும்,  என் குழந்தையையும், எப்படியெல்லாம் பார்த்து, பார்த்து கவனித்து கொண்டீர்கள்.

அதற்கு நான் இந்த பிறவியில்  மட்டுமல்லாது இனி எடுக்கும் எத்தனை பிறவிகளில் நன்றிக்கடன் படபோகிறேன்று எனக்கு  தெரியாது. ஆனால் இனி வரும் ஒவ்வொரு பிறவிகளிலும் உங்களுடன் இணைந்திருக்கும் உறவு வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இனி நான் போகும் பாதையில் உங்களை மாதிரி நல்லவர்களை சந்திக்க வேண்டுமென்றும், பிரார்த்தித்து கொண்டும் போகிறேன்.

போகிறேன் என்றதும் முன்பு மாதிரி முட்டாள்தனமான முடிவை நான் எடுத்து விடுவேனோ.... என்று நீங்கள் கலங்க வேண்டாம். உங்களிடம் பழகிய நாட்களில் உங்களது தைரியத்தை பார்த்து வியந்திருக்கிறேன்... அந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், மூலதனமாக வைத்துக்கொண்டு, நான் படித்த கல்வியறிவின் மூலம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து உங்களை மாதிரி தைரியமான திறமையான பெண்ணாக உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் இங்கிருந்து போகிறேன்.

என் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லாததால் இந்த முடிவை உங்களை கேட்காமல் எடுத்திருக்கிறேன்.. என் முடிவு உங்களுக்கு தவறாக பட்டால் தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும்.

என் வயிற்றிலிருந்த பாரத்தை இறக்கி உங்கள் மேல் ஏற்றிவிட்டு செல்வதற்காக என்னை மன்னித்து விடுங்கள். குழந்தையுடன் செல்லும் என் பயணம் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற சிறிய பயத்தில் உங்களை சிரமத்தில் ஆழ்த்திவிட்டுச்செல்கிறேன். என்னை விட நீங்கள் அக்கறையுடன் குழந்தையை பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

நான் நினைத்த மாதிரி ஒரு நல்ல நிலைமையில் உங்களையும், என் குழந்தையையும், சந்திக்கும் போது,  கன்னியாய் இருக்கும்போதே, ஒரு தாயாயிருந்து ஒரு குழந்தையை வளர்த்த சிரமத்திற்க்காக உங்கள் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்பேன்.. அந்த நாளை விரைவில் தர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்".

இப்படிக்கு
உங்களை எந்த நிமிடமும் மறவா,
உங்கள் அன்புத்தங்கை,
நளினா.

இனியும் ஒரு நாள் தொடரும்.....


Monday, May 21, 2018

நன்றிக் கரையல்கள்


அனைவருக்கும் வணக்கம் .

சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார். அதை படித்தது முதற்கொண்டு, நான் காகங்கள் குறித்து எழுதிய இரண்டு கதைகளை என் பதிவில் போடும் ஆவலில் இருந்தேன். ஒரு கதையாக "மனசு" வெளியிட்டேன். அதற்கு பாராட்டுகள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமுவந்த நன்றிகள். மற்றொன்றாக இந்த "நன்றிக் கரையல்கள் "கதை. இந்தக்கதையையும்  வெளியிட வேண்டுமென  என் "மனசு"ம் ஆசைப் பட்டதினால், அதையும் ஆமோதித்து என் படைப்பாக இன்று இது...

படிக்கும் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்........

நன்றிக் கரையல்கள்





வெயிலின் தாக்கம் மதிய நேர குட்டித் தூக்கத்தை பாதித்தது. குழந்தைகள் இல்லாததினால் வீடு வெறிச்சென்று இருந்தது என் மனதை போல....

என் மனைவியின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் நான் அலட்சியப் படுத்தியதால் குழந்தைகளுக்கு வரிசையாக வந்த நான்கைந்து நாள் விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு, என்னை உதாசினபடுத்திவிட்டு,  குழந்தைகளுடன் பக்கத்து ஊரிலிருக்கும் தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள்.

அவளுடைய புதிய யோசனைகள் என்னை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் என்பதை நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும், அவள் புரிந்து கொள்ள வில்லை.

அவளது கோபத்திற்கு வடிகாலாக அவளுக்கு தாய் வீடு உதவுகிறது. ஆனால் அலுவலக வேலையை விட்டுவிட்டு நான் எங்கு போவது? மனதில் வேதனையை சுமந்து வாரத்தின் விடுமுறை நாளை கழித்து கொண்டிருக்கிறேன்.

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் புழுக்கத்தைக் குறைக்க மாலை சிறிதுநேரம் காலாற நடந்தால்தான், இரவில் நல்ல தூக்கத்தை சந்திக்க இயலும் என்பதால், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடை பயணம் தொடங்கினேன்.

நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நிழலாக நின்றிருந்த பல சாலையோர மரங்கள், சாலை விரிவாக்கதிற்காக சாவை சந்தித்து விட்டும், சில சந்தித்தும் கொண்டுமிருந்தன

மொத்தத்தில் விரையும் வாகன வசதிக்காக தன் வாழ்நாளைத் தொலைத்துக்  கொண் டிருந்தன.

மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் தங்கள் வாசஸ்தலத்தை விருத்தி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆங்காங்கே வானளாவிய கட்டிடங்களும் வணிக வளாகங்களும் பெருகி இருந்தது. மக்களின் வசதிக்காக சாலைகள் புனரமைக்க பட்டு இயற்கை புரையோடி போயிருந்தது.

நடந்து வலித்த பாதங்கள், இனி நாலடி கூட நகர முடியாது என்பதை உணர்த்த, பூத்துக் குலுங்கிய பூங்கா ஒன்றில் புகுந்து புல் தரையில் அமர்ந்தேன்.

"மரங்கள் மடிந்தால் என்ன! நாங்கள் இருக்கிறோம்" என்று மார்தட்டியபடி புதியதாய் உருவாக்கபட்ட அந்த பூங்காவின் புற்கள், காற்றில் சிலிர்த்தபடி கண் சிமிட்டி கொண்டிருந்தன.

மாலை சூரியன் மங்கினாலும் மேகவீதியில் மறைந்து மறைந்து மேகங்களுக்கும் பொன்னிறத்தை கொடுத்தபடி மேற்கே மறைய தலைப்பட்டு கொண்டிருந்தான்.

வான் வெளியில் விதவிதமான பறவைகள் வட்ட மிட்டும், குறுக்கும் நெடுக்குமாகவும், பறந்துக் கொண்டிருந்தது.

"எங்களுக்கு வான்வெளியே போதும், இந்த மண்ணும் மரங்களும் அவ்வளவாக அவசியமில்லை. எங்கள்  கூர்மையான பார்வை கொண்டு அங்கிருந்தபடியே, எதையும் கண்காணிப்போம்" என்ற அலட்சியத்தோடு, கழுத்தை நிமிர்த்திக் கொண்டு, கழுகுகள் தங்கள் வாழ்நாளில் பாதியை வட்டமிட்டபடியே கழித்துக் கொண்டிருந்தன.

மற்றும் வாலில்லா பறவைகளும், வால்நீண்ட பறவைகளும், "எங்களுக்கு மட்டும் பறக்க தெரியாதா, என்ன?" என்றபடி கூச்சலிட்டு கொண்டு அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது.

காக்கைகளும், புறாக்களும், "எங்களுக்கு கீழ்நோக்கி பறக்கவும் தெரியும்" என்று நிரூபிக்க புல்தரைகளில் நடந்து காட்டி பறந்து சென்று மரமேறி, மறுபடியும் வானில் பறந்து வித்தைகள் செய்து கொண்டிருந்தன.

வானின் மற்றோரு மூலையிலிருந்து மேகங்களுடன் புறப்பட்டு கொண்டிருந்த மழை, "இவர்களது விளையாட்டுகளை ரசிக்க நானும் வரவா?" என்று கேட்டது.

"நீ வந்தால் அவ்வளவுதான்! உன்னைக் கண்டதும் இவர்கள் ஓடிவிடுவார்கள். என்னுடைய ஒளியிலும் அதன் இதத்திலும்தான் இவர்களால் உல்லாசமாக ஓடியாட முடிகிறது" என்று சூரியன் சிரித்தபடி மேகத்தினின்று வெளிப்பட்டு கூறி விட்டு, மீண்டும் ஒரு மேகத்தின் மறைவுக்கு சென்றான்.

"அது சரி, உன்னை விட நான் ஒன்றும் குறைந்தவன் அல்ல; உன் வெப்பத்தைவிட என் குளிர்ச்சியைதான் அனைவரும் அதிகமாக விரும்புவார்கள். உன்னிடம் இருக்கும் ஒளியைவிட நான் குறைந்து விட்டேனா! என் ஒளி கண்ணைக்கூச செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக்கும்." என்றபடி பளிச்சென்று ஒரு மின்னலை தோற்றுவித்தது  மழை மேகம்.

"நீ எவ்வளவு தான் குளிர்வித்தாலும் என் வெப்பம் இல்லாவிட்டால் எல்லோரும் தவித்து போய்விடுவார்கள் தெரியுமா? தினமும் வந்து போகும் நான் எங்கே, எப்பொழுதோ வந்து போகும் நீ எங்கே?" என்று கூச்சலிட்டபடி மேகங்களை தூர விலக்கி கொண்டு, சூரியன் ஆவேசமாக வெளிவந்து  கேட்டு சுட்டெரித்தான்.

"போதும்... உங்கள் சண்டை! யார் பெரியவன் என்ற வீண் சர்ச்சையை விடுத்து உங்கள் கடமையை செய்யுமிடம் என்னுடையது, என்பதை மறந்துவிடாமல் அவரவர் கடமையை ஒழுங்காக செய்யுங்கள்" என்று வானம் இந்த சண்டைக்கு ஒரு முற்று புள்ளி வைப்பதுபோல் ஒரு முறை உறுமியது.

ஒருபுறம் வானத்தின் வர்ணஜாலங்கள் மனதை மயக்கியபடி இருக்க, மறுபுறம் அருகிலிருந்த மரமொன்றில் அதன் அடர்த்தியான கிளையொன்றில் காக்கைகள் விடாது கரைந்து கொண்டிருந்தது.

தலை திருப்பி அந்த காக்கைகளை பார்த்தபடி, புல்வெளியில் சாய்ந்து படுத்தேன். அந்த கிளையில் காக்கை கூடுகட்டி இருந்தது. கூட்டுக்குள் இருந்தபடி, இரண்டு குட்டி காக்கைகள் கரைந்து கொண்டிருந்தது. அருகில் பெரிய காகம் தன் அலகுகளால், தன்னுடைய இறக்கைகளை கோதி கொண்டும், அடிக்கடி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டும், தன் குட்டி காக்கைகளுக்கு காவலாக அமர்ந்து கொண்டிருந்தது.

இரை தேடி சென்றிந்த தன் இணை பறவையை எதிர் நோக்கி அமர்ந்திருந்த அந்த காகம், பசியினால் கத்தும் தன் குட்டிகளுக்கு, அருகில் சென்று தன் அலகால் அதன் தலைகளையும் கோதி விட்டது. "தாய் வந்ததும் பசி ஆறலாம், சற்று பொறுங்கள்" என்று சொல்லாமல் சொல்லி உணர்த்திய அந்த காக்கையின் செயலுக்கு படிந்த குட்டி காக்கைகள் கண் மூடி அனுபவித்த அந்த கிறக்கம், என் மனதில் ஆழப்பதிந்தது.

பறவைகளின் பாசபிணைப்பும், நம்மைப் போல் பேசி ஆற்றிக்கொள்ள முடியாத பாச சொற்களும், இவைகளும் நம்மைப் போல் பேசினால் எப்படி இருக்கும் என்று, என் மனதில் எழுந்த கற்பனை, காட்சியாய் மனதினுள் விரிய கண்மூடினேன்.

தன் குழந்தைகளின் தலையை பாசத்துடன் தடவி சமாதானபடுத்திய அந்த காகம், "குழந்தைகளே! உங்கள் தாய் இரைதேட வெகுதூரம் சென்றிருக்கிறாள் போலும், அதனால் தான் நேரமாகிறது. நானும் சென்று விட்டால் உங்களை யார் கவனித்து கொள்வார்கள்? அதனால் சற்று பொறுங்கள்! தாய் வந்தவுடன் பசியாறலாம்" என்று அன்புடன் கூறிகொண்டிருந்தபோது, சாலையில் சென்ற ஓர் வாகன இரைச்சலில் பீதி அடைந்த குட்டி காக்கைகள், சிறிது வளர்ந்த இறக்கைகள் படபடக்க தந்தையின் அருகில் மேனி நடுங்க ஒட்டி கொண்டனர்.

 "அப்பா! இவர்களுடன்தான் நான் வாழ வேண்டுமா?" என்று ஒரு குட்டி காகம் பயத்துடன் கேட்டது.

"ஆம் மகனே!, நாம் இவர்களை அண்டிதான் வாழ வேண்டும். வேறு வழியில்லை. முன்பெல்லாம் இவர்கள் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 

நமக்கு அடைக்கலமாக அவரவர் வீட்டு கொல்லைபுறத்தில் விதவிதமாக  மரங்களை வளர்த்து, நாம் நிம்மதியாக வாழவும் வழிவகுத்து தந்திருந்தார்கள். 

நம்மை அவர்களின் முன்னோர்களாக மதித்து, நமக்கு தினமும் சோறிடுவது அவர்களின் வழக்கமான செயல்களில் ஒன்றாகவும் நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.

அப்போதெல்லாம் நாம் உணவுக்காக அந்தளவு அல்லல் படுவது கிடையாது. ஆனால் இப்போது, காலம் மாறி விட்டது. 

அவர்கள் கூட்டு குடும்பத்தை சிதைத்து, அவர்களின் வசதிக்காக "நான்," நீ, "என்று பிரிந்து போனதில், கொல்லையும் மரங்களும் காணாமல் போனதில், என் அன்னை தந்தை காலத்திலேயே, நான், சாலையோர மரங்கள், பூங்காவின் மரங்கள் என ஊரின் எல்லைக்கு வாழவந்தாயிற்று.

நம் பறவை இனங்களில் சில, இவர்களின் விஞ்ஞான முன்னேற்றதிற்கு ஈடு கொடுக்க முடியாமல், நம்மிடம்கூட சொல்லிக் கொள்ளாமல், எங்கோ வெகு தொலைவிற்கு  சென்று விட்டன. 

நாம்தான் வேறுவழியின்றி இவர்களுடன் காலத்தை கழித்து வருகிறோம்.

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில், இந்த ஜகத்தினை எரித்திடுவோம்!" என்று இவர்களின் ஒருவன் பாடினான்.

"தனித்திருக்க நமக்கோர் இடமில்லையெனில், இந்த தரணியை தகர்த்திடுவோம்! என்று நாம் தினமும் பாடினாலும், இங்கு கேட்பார் ஒருவரில்லை" என்று பெருமூச்சுடன் சொல்லி நிறுத்தியது காக்கை.

காக்கை குழந்தைகள், தங்கள் முன்னோர்களின் கதையை கேட்டு கொஞ்சம் பசியை மறந்தது.

தந்தை காகம் சுற்றுமுற்றும் மறுபடி ஒருமுறை பார்த்துவிட்டு, தன் இறக்கைகளை சிலுப்பிக்கொண்டு தன் அலகால் கோதிவிட்டு கொண்டது. 

அமர்ந்த இடத்தை விட்டு சற்று தள்ளி அமர்ந்த போது அதன் ஒரு காலில் விரல்கள் ஏதுமில்லாததால், சற்று சறுக்கி சமாளித்து மறுபடி குட்டிகளின் அருகே நகர்ந்து அமர்ந்தது

தந்தையின் கால் வித்தியாசத்தை கண்ட குட்டி காகங்கள், "அப்பா! தங்கள் பாதங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது?" என்று கேட்டது.

"அது ஒரு கதை! நம் கூடு கட்டும் பணிக்காகவும் உணவுக்காகவும் நானும் உங்கள் தாயும் அடிக்கடி மரத்திலிருந்து சாலைகளில் இறங்க வேண்டிருந்தது.

அப்பொழுது ஒரு நாள் விரைவாக மோதி விடுவதுபோல் வந்த ஒரு வாகனத்தின் இரைச்சலுக்கு பயந்து சட்டென்று அருகிலிருந்த மரத்தில் பாய்ந்து ஏற முயன்றதில் மரக்கிளை சறுக்கி கிளையில் கால் மாட்டிக்கொள்ள, என் கால் விரல்களை இழந்து விட்டேன்" என்று காகம் கூற குழந்தைகள் தந்தையை வேதனையுடன் பார்த்தன.

காகம் குழந்தைகளை சமாதான படுத்த மறுபடி தன் அலகால் அவர்களின் தலையை தடவிவிட்டது.

 "குழந்தைகளே! கவலைபடாதீர்கள், மனிதர்கள் தங்கள் வசதிக்காக ஏற்படுத்திகொண்ட வாகனங்களால் அவர்களுடன் நம் இனத்தவர்களுக்கும் பாதிப்புதான், என்ன செய்வது? அதை அவர்கள் புரிந்து கொள்ள அந்த ஆண்டவன்தான் அருள் புரிய வேண்டும்.

நம் முன்னோர்கள் வாழ்ந்த இரைச்சலற்ற இன்பமான வாழ்க்கையை, நாம் இனி கனவில்தான் வாழ முடியும்." என்று குழந்தைகளை அன்புடன் தேற்றிக் கொண்டிருந்த போது தாய் பறவை பறந்துவந்து, தான் தேடி கொண்டுவந்த உணவுகளை தன் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டது. 

பசியுடனும் தந்தையுடன் உரையாடிய களைப்புடனும் இருந்த காக்கை குட்டிகள் தாயின் அன்பில் திளைத்து பசியாறி சற்று கண்ணயர்ந்தன.

"கா", "கா" என்று குரல் கேட்டு என் கற்பனை சிந்தனை அனைத்தும் கலைய கண் விழித்தேன். மரத்தில் குட்டி காக்கைகள் உறங்க, உண்மையிலேயேே அதன்் தாய், தந்தை பறவைகள் அருகருகே அமர்ந்து காவல் காத்துக் கொண்டிருந்தன.

சற்று கழித்து "நீ இரு! நான் சென்று இரைதேடி வருகிறேன்" என்பது போல் அதில் ஒரு காகம் "விர்" என்று பறந்து சென்றது.

வானம் லேசாக இருண்டிருந்தது, சூரியன் முற்றிலுமாக மறைந்து கொண்டிருந்தான்.

அவனை விரட்டுவது போல் மழைமேகங்கள் வேகமாக வானில் வந்து கொண்டிருந்தன.



"உனக்கு பயந்து செல்லவில்லை.. இன்று என் கடமை முடிந்து விட்டது. இனி என் வரவை மனிதர்களும் பறவைகளும் மறுபடி நாளைதான் ஆவலுடன் எதிர்பார்பார்கள்.. அதற்காக செல்கிறேன்!" என்று சற்று அலட்சியமாக சொல்லிவிட்டு சூரியன் மறைந்து சென்றான்.

"வந்துவிட்டேன் பார்த்தாயா?" என்று எக்களிப்புடன் மழைமேகங்கள் முற்றிலுமாக சூழ்ந்துகொண்டது.

"மறுபடியும் சண்டையா! எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீர்களா?" என்று வானம் சற்று கோபமாக உறுமத் தொடங்கியது.

அந்த காக்கை மறுபடி பறந்து வந்து மரமேறி கொண்டது. நானும் அவ்விடத்தை விட்டு எழுந்து வீடு நோக்கி பயணமானேன்.

சற்று வலுத்த மழை துளிகளுக்கு பயந்து வாகனங்களும், மக்களும் தங்கள் வேகத்தை கூட்டினார்கள்.

தெப்பலாக நனைந்த படி வீடு வந்து உடைமாற்றி என் நளபாகத்தை உண்ட பின் படுக்கையில் விழுந்தேன்.

மாலையில் கண்களில் தென்பட்ட காட்சிகளும், என் கற்பனையில் நடந்த காக்கைகளின் உரையாடல்களும் சுற்றி சுற்றி வந்தன.

 எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் நினைவுகளும் நடு நடுவே வந்து போயின.

 "வீட்டின் பின்புறம் இருக்கும் காலி நிலத்தில் நாலு அறையெடுத்து அதையும் ஒரு வீடாக்கி வாடகைக்கு விட்டால் பணத்திற்கு பணமும் ஆச்சு! நாளை நம் குழந்தைகள் வளர்ந்தபின்பு அவர்களுக்கும் பயன்படும்" என்று நச்சரித்த மனைவியின் பேச்சும், ஏற்கனவே கடனாளியாக இருக்கும் என் நிலையும், அதனை அவளுக்கு புரிய வைக்கும்போது எழுந்த கோப தாபங்களும், நினைவுக்கு வர மறுபடியும் நிம்மதி பறிபோய்விடுமோ.... என்ற பயத்தில் உறக்கம் வரவில்லை.

பிறர் முதுகின் அழுக்கை விமர்சிக்கும் நாம், நம் முதுகை ஆராயவதில்லை! அதை பற்றி கவலை ஏதும் அடைவதுமில்லை.

நிதர்சனத்தின் உறுத்தலில் நீண்டநேரம் நித்திரை வர மறுத்தது.

 பலவிதமான எண்ணங்களின் இறுதியில் மனதில் ஒரு தெளிவான முடிவு வந்தது.

நாளை காலை மனைவியின் எதிர்ப்பையும் மீறி அந்த காலி நிலத்தில் நிறைய மரக்கன்றுகளை வாங்கி நட்டு பராமரித்து வரவேண்டும்.

வரும் சிறிது காலத்திற்குள், காக்கைகளும் பிற பறவைகளும் வந்து அம்மரங்களில் தங்கி உண்டு உறங்கி  வாழவும் அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற முடிவால் நிம்மதியுடன் நல்ல உறக்கமும் வந்தது.

இரவு உறக்கத்தில் வந்த கனவில், காக்கை களுடன் பிற பறவைகளின், "நன்றிக் கரையல்கள்" காதில் இனிமையாக ஒலிக்க நல்ல உறக்கம் விடிந்த பிறகும் தொடர்ந்தது.

Thursday, May 17, 2018

அன்னை ...


இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக்காது.. கடக்கவும் விட மாட்டோம். 

கடந்த ஒருவார காலமாக  காய்ச்சல், பல்வலி, இருமல் என உடல்நல குறைபாடு. இதில் ஒவ்வொரு நாளும் நம் கடமைகளை செய்யும் போது (சமையல், இதர வேலைகள்)  வேலைகளில் விருப்பபின்மை இல்லாது, ஏதோ சுவாரஸ்ய குறைவோடு,  என்னை நான் கடந்து கொண்டிருந்த போது  அன்னையர் தினம் என்னை கடந்து விட்டது. அதற்காக பதிவெல்லாம் ரெடி பண்ணி எழுத நினைத்தது இயலாமல் போய் விட்டது. 

என் சிறு வயதில் விடாமல் 20 நாட்களுக்கும் மேலாக துரத்திய ஜுரமொன்றில், என் அன்னை என்னை நினைத்து கலங்கியது இன்னமும் என் நினைவின் அடித்தளத்தில் பதிந்திருக்கிறது. அப்போதெல்லாம் இந்த மாதிரி தெருவுக்கு தெரு டாக்டர்  என்ற வசதி கிடையாது. ஒரு காய்ச்சலுக்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, அரத்தை, இஞ்சி இதை விட சிறந்ததாக எதுவும் கிடையாது என்ற நம்பிக்கையே காய்ச்சலை அலறி அடித்து ஓடிப் போகச் செய்து விடும்.  ஆனால் அந்த தடவை அது அலறாமல், தைரியமாக டாக்டரை சந்திக்காமல் நகர மாட்டேன் எனவும், ,எந்தவசதியும் இல்லாத எங்கள் இடத்திலிருந்து, சோர்ந்திருந்த என்னை தூக்கிக் கொண்டே நடந்து,  நீண்ட தொலைவிலுள்ள மருத்துவரிடம் சென்று காண்பித்து,  அவர் பரிசோதனை செய்த பின் "டைப்பாயிடு" எனவும் அதற்கும் கலங்கி, (அப்போது  அந்த ஜுரம் அனைவரையும் பயமுறுத்துவது ) எனக்கு குணமாகிற வரைக்கும் கண்ணின் மணியென காத்த என் அம்மாவின் நினைவு இப்போதும் ஜுரம் வந்தவுடன் வந்து விட்டது.  அன்னையிடம் சொல்லி ஆறுதல் பட முடியாததை இந்த அன்னை பதிவில் உங்களைவரிடமும்  சொல்லி,  மன ஆறுதல் அடைகிறேன். 

அன்னையர் தினம் கடந்து விடினும், அன்னையை தினமும்  மனந்தனில் சுமப்பவர்களுக்கு
தினமும் அன்னையர் தினமே..... 


படித்ததில் பிடித்ததாக மற்றொன்றும்.. 

வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும்.  நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான்.  தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள்.

ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,
சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம். அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மகனே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள்.

தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான்.

அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள்.

மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான்.

சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய்.  நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய்.

உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம்.  

தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது.
தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான்.  நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்

Saturday, May 12, 2018

மனசு



 அந்த வீட்டின் முற்றத்தில் முருங்கை மரத்தில் அமர்ந்திருந்த அந்த காகம் கரைந்தது. 

உள்ளேயிருந்து முற்றத்திற்கு வந்த முதியவர் ஒருவர் கரைந்து கொண்டிருந்த அந்த காகத்தை அண்ணாந்து பார்த்தார். 

 "ஏன் இப்படி காலையிருந்து கத்தி கொண்டேயிருக்கிறாய்?" யாராவது வரப்போகிறார்களா என்ன? என்று கேட்டபடி கீழேயிருந்து கல் எடுத்து எறியும் பாவனையில் ஓரு முறை கீழே குனிந்து நிமிர்ந்து கையை ஆட்டியபடி "சூ" "சூ" என்றபடி அதை விரட்டினார். 

அந்த காக்கையும் அவருக்கு பயந்தது போல் அமர்ந்திருந்த அந்த கிளையிலிருந்து பறந்து மறுபடி வேறொரு கிளையில் போய் அமர்ந்து கொண்டது. 

"அப்படி யராவது வந்தாலும் பரவாயில்லை நாலு சுவத்தை பாத்துட்டு பொழுது போகமே தவிக்கிறதுக்கு நாலு நாள் பொழுதாவது நல்லாபோகும்" என்று முணுமுணுத்த அந்த முதியவர் தன்னுடைய மிரட்டலுக்கு காகம் கட்டுபட்டு விட்டது என்ற திருப்தியுடன் உள்ளே சென்றார்.

சிறிது நேர அமைதிக்குப்பின் மறுபடியும் அந்த காகம் கரைய ஆரம்பித்தது. 

அதன் ஓயாத கரைதலுக்கு செவிமடுத்து வீட்டின் உள்ளிருந்து ஒரு மூதாட்டி வெளிவந்து கண்ணை இடுக்கியபடி மரத்திலிருந்த அந்த காக்கையை உற்று நோக்கினாள். 

"ஏன் இப்படி காலையிலிருந்து கத்திகிட்டேயிருக்கு? காக்கா ஒயாம கத்தினா யாராவது வருவாங்கனு சொல்வாங்க, அப்படி யார் வரப்போறாங்க? 
பக்கத்து ஊரிலிருக்கும் என் தங்கையை பார்த்தே ரொம்ப நாளாகி விட்டது. 

என்னாலேயும் முந்தி மாதிரி துணையில்லாமே தனியா எங்கேயும் போக முடியலே.... அவளாவது வந்தா நல்லாயிருக்கும்!" என்று புலம்பியவாறு கீழே கிடந்த ஒரு சின்ன குச்சி போன்ற கம்பை எடுத்து உயா்த்தி பிடித்து  "சூ" கத்தாதே! என்று சத்தமிட்டபடி கம்பை மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கையை பார்த்து எறிந்தாள். 

காக்கையும் கம்புக்கு பயந்து வேறு கிளை மாறி அமர்ந்து கொண்டது. அது கத்துவதை நிறுத்திவிட்ட சந்தோஷத்தில் அவளும் உள்ளேசென்றாள்.

சிறிய நிசப்ததிற்குப்பின் மறுபடியும் அந்த காகம் கரைய ஆரம்பித்தது. 

முற்றத்தில் ஏதோ காயவைப்பதற்காக துணியும் பாத்திரமுமாக உள்ளேயிருந்து வெளிப்பட்ட அந்த நடுத்தரவயது மாது கையிலிருப்பதை கீழேவைத்து விட்டு மரத்திலிருந்த காக்கையை அண்ணாந்து பார்த்தாள். 

"சனியன்! காலையிலிருந்து கத்திட்டேயிருக்கு, யார் வரப்போகிறார்களோ? உள்ள செலவு பத்தாதென்று..... ஏற்கனவே இந்தமாதம் ஊரிலிருக்கும் இரண்டாவது மகன் பணம் அனுப்பவில்லை.... 

ஒரே மகள் பிரசவத்திற்காக வேறு வந்திருக்கிறாள்.. வயதான மாமனார் மாமியாரையும் கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயம்.. எல்லா செலவுகளையும் கணவரின் குறைந்த சம்பளத்திலும், பெரியவன் கொடுக்கும் பணத்திலேயும் சமாளித்துக் கொள்ளவேண்டும்.


'இந்த லட்சணத்தில் விருந்தாளி ஒருகேடா", என்று முணுமுணுத்தவள் காக்கையை கோபத்துடன் முறைத்தாள். 

"ஒருவேளை ஊரிலிருக்கும் மகன் பணத்தை அனுப்பியதற்கு அறிகுறியாக இந்த காக்கை இப்படி விடாது கரைகிறதோ?" என்று நினைத்த மாத்திரத்தில் கோபம் சற்றுகுறைந்து சிறிது நிம்மதி எட்டிப்பார்த்தது. 

இருப்பினும், கையுடன் கொண்டு வந்திருக்கும் அரிசியை மரக்கிளையில் அமா்ந்துகொண்டு கத்திக் கொண்டேயிருக்கும் இந்த காக்கையை நம்பி எப்படி காயவைத்து விட்டுச்செல்வது? என்று யோசித்து கொண்டிருந்தவள் அந்த பக்கமாகவந்த தன்மகளை பார்த்ததும் சற்றுபூரிப்புடன் ... 

"வா, சுசீ.. இதை உலரவைத்து விட்டுசெல்கிறேன் காக்கா வந்து கொத்தாமல் பார்த்து கொள்கிறாயா?" என்ற வண்ணம் அரிசியை துணியை விரித்து காயவைத்து விட்டு உள்ளேசென்றாள்.

காகம் கிளை மாறிமாறி அமா்ந்து சத்தத்துடன் கரைந்தது.

 சுசீலா மேலே பார்த்துவிட்டு கிழே ஒருகிடந்த கம்பை கையிலெடுத்து கொண்டு காக்கையை விரட்டும் பாவனையில் கம்பைஆட்டிக்கொண்டே துவைக்கும் கல்லில்போய் அமா்ந்துகொண்டாள்.

 "இந்த காக்கா இன்று ஏன் இப்படி கத்திகொண்டேயிருக்கு? ஒருவேளை இந்தமாதம் வரமாட்டேன் என்று சொல்லிச்சென்ற தன் கணவன் திடும் மென்று சா்ப்பிரைசாக இருக்கட்டும் என்று வரப்போகிறரோ?" என்று நினைத்துக் இகொண்டவள் அந்த மகிழ்ச்சியில் மூழ்கி போனாள்.

அந்த காகம் விட்டு விட்டு கரைந்து கொண்டேயிருந்தது. 

உள்ளேயிருந்து ஓடிவந்த குழந்தையின் பின்னால் சத்தமிட்டபடி அந்த வீட்டின் மருமகள் அந்த குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்காக கையில் சாத தட்டுடன் வெளிப்பட்டாள். 

கண்மூடி அமா்ந்திருந்த சுசீலாவின் நிலை கண்டதும் குறும்புடன் அவள் கண்ணத்தை நிமிண்டியவள் "ஏய்! என்ன கனவு காண்கிறாயா? கனவில் யார்?" என்று கேலியாக கேட்கவும் சுசீலாவின் முகம் சிவந்தது.

"ஒன்றுமில்லை அண்ணி.. இந்தஅரிசி கொஞ்ச நேரம் காயறவரைக்கும் அம்மா பாத்துக்க சொன்னாங்க" என்று இழுத்தாள்..

"சரி சரி.. குழந்தைக்கு சாதம் கொடுத்திட்டு நான் அதை எடுத்துகிட்டு வரேன் நீ உள்ளே போ வெயிலில் இருக்காதே" என்று அன்போடு கூறி அவளை அனுப்பியவள் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தாள்.

 சிறிது நேரம் ஒழுங்காக சாப்பிட்ட அந்த குழந்தை சாப்பிட அடம்பிடிக்க ஆரம்பித்தது. 

"சாப்புடுகண்ணு நீ சாப்பிடாட்டி அந்த காக்கா வந்து உன் சாதத்தையெல்லாம் சாப்புட்டு போயிடும். அப்பறம், இந்த அனுக்குட்டிக்கு ஒண்ணும்கிடையாது ஒருவாய் வாங்கிக்கோடா செல்லம்". தாயின் கொஞ்சலிலும் கெஞ்சலிலும் சிறிது சாப்பாடு உள்ளே சென்றது. 

"அம்மா! காக்காவுக்கும் பசியா?" குழந்தை மரத்திலிருந்த காக்காவை பார்த்தபடி மழலையில் கேட்டது. "ஆமாம், நீ சீக்கரம் சாப்பிடு! இல்லைனா காக்காவுக்கே அத்தனையும் போடப்போறேன்." மிரட்டலில் இரண்டுவாய் சாப்பாடு இறங்கியது. 

குழந்தை வீட்டிலிருந்த திண்பண்டங்களை நினைவு கூர்ந்து அது வேண்டுமென்று அடம்பிடித்தது. "சாப்பிட்டவுடன் தருகிறேன்" என்ற தாயின் உறுதிமொழியுடன் ஒரு வழியாக சாப்பாட்டுகடை முடிந்து குழந்தையுடனும் காயவைத்த அரிசியுடனும் அவள் உள்ளே சென்றாள்.

அந்த காகம் கிளைமாறி அமா்ந்து தன் அலகால் இறக்கைகளை நீவி விட்டுக்கொண்டு உடலை சிலுப்பியபடி மறுபடி கரைய யத்தனித்தது.

 "என்ன இது! நானும் காலையிலிருந்து கத்திக்கொண்டே இருக்கிறேன்.. ஒவ்வொருவராக வந்து நான் கரைவதற்கு அவரவர் மனதிற்கு பிடித்த காரணங்களை கற்பித்துக்கொண்டு சென்று விட்டார்களே யன்றி, எனக்கும் பசி தாகம் என்று ஒன்று இருக்கிறது, அதற்கு நான் இவர்களை நம்பிதான் இருக்கிறேன், என்பதை மறந்து விட்டார்களே! 

ஒருவராவது அதைப்பற்றி சிந்திக்கவில்லையே.. மனிதநேயம் மறைந்துவருகிறதே.." என்ற ரீதியில் சென்ற காக்கையின் சிந்தனையால் அது கரைவதை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி அமா்ந்திருந்தது.

மறுபடி வீட்டின் உள்ளேயிருந்து  அந்தக்குழந்தை திண்பண்டகள் நிரம்பிய தட்டுடன் ஒடிவந்து முற்றத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தது.

 குழந்தையின் மனதில் காகத்தின் நினைவுவர அது மேலே நிமிர்ந்து பார்த்தது. அங்கு கரையாமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கையை பார்த்ததும், "காக்கா.. உனக்கும் பசிக்கா? இந்தா நீயும் கொஞ்சம் சமத்தா சாப்பிடு என்ன.." என்று தன் மழலை சொற்களில் மிழற்றியபடி தட்டிலிருந்த திண்பண்டகளை தன் சின்ன கைகளால் கீழே எடுத்து போட்டது. 

பின்பு மரத்திலிருந்த காக்கையை பார்த்து தன் சின்ன கையை ஆட்டி, "வா, வா" என்றது. 

காகம் சிறிது நேரம் கீழிறங்கி போகலாமா, வேண்டாமா என்று யோசித்த போது  உள்ளிருந்து அழைத்த அவள் அம்மாவின் குரலுக்கு பணிந்து "தோ வரேம்மா.." என்றபடி ஒடியது. 

"இந்த குழந்தைக்காவது என் பசி புரிந்ததே" என்ற சந்தோசத்தில் காகம் 'விர்"ரென்று பறந்து வந்து, ஆவலுடன் அந்த பண்டங்களின் அருகில் அமர்ந்தது. 

"குழந்தைகளிடம் இன்னும் மனிதநேயம் மங்கிவிடவில்லை.." என்று நினைத்தபடி சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துவிடடு எச்சிலூறும் தன் அலகால் அந்த திண்பண்டத்தை கொத்தியது.

 அப்போது உள்ளிருந்து அந்த குழந்தையின் வீறிட்ட அழுகையும், அவள் அம்மாவின் சத்தமான கத்தலும், காக்கையை மறுபடி மரத்திற்க்கே பறக்க வைத்தது.

காக்கை வாயில் உணவுடன் கீழே பார்த்தது. முற்றத்திற்கு அந்த குழந்தை சகிதம் வந்த பெண் கீழே கொட்டிகிடந்த பலகாரங்களை பார்த்ததும், "இங்கே எல்லாத்தையும் கொட்டிட்டு உள்ளை வந்து அழறியா? உன்னை உள்ளேயே வைத்து சாப்பிடசொன்னேனில்லியா? வெளியே வந்து சாப்பிட்டா காக்கா வந்து கொத்திகிட்டு போயிடுமுனு அம்மா சொன்னேனே கேட்டியா?" என்று கடிந்து கொண்டாள். 

குழந்தை கீழே  சிதறியிருந்த பண்டங்களை பார்த்ததும் காக்கையையின் நினைவு வந்து மேலே மரத்தை பார்த்தது. 

தட்டிலிருந்தை கீழே கொட்டிவிட்டதற்கு அம்மா கடிந்து கொண்டதினால் வந்த அழுகையை மறந்தவளாய், மேலே கையை காட்டி "அம்மா! அந்த காக்காக்கு பசிம்மா..  நாந்தான் சாப்பாடு போட்டேன்.." என்று சந்தோசமாக  மழலையில் சொன்னபடி கைத்தட்டி சிரித்தது. 

தாயின் கவனம் மரத்திலிருந்த காக்கையிடம் சென்றது.

 காக்கையின் அலகினிடயே இருந்த பண்டத்தை பார்த்ததும் "பாத்தியா? நீதானா! அன்னிக்கு பாட்டிகிட்டேயிருந்து வடை திருடுன கதை மாதிரி என் குழந்தைகிட்டேயிருந்து திண்பண்டங்களை திருடிகிட்டு அவளை அழ வச்சியா?" என்றுகேட்டவாறு கையை ஆட்டி காக்கையை விரட்டினாள். 

கதை என்றதும் எல்லாவற்றையும் மறந்து விட்டு குழந்தை "அம்மா! "காக்கா கதை" சொல்லும்மா" என்று நச்சரிக்க ஆரம்பித்தது. "நீ உள்ளே வா அப்பறம் சொல்லேறன்" என்றபடி அவள் குழந்தையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

காக்கை மிரட்சியுடன் விழிகளை உருட்டி பார்த்தது. 

என்றோ ஒருநாள் தன் மூதாதையர் எவரோ ஒருவர் செய்த தவறை ( அது கற்பனையாக கூட இருக்கலாம் ) இன்றும் தன் குழந்தைகளுக்கு கதையாக சொல்லி மகிழ வைக்கும் மனிதர்களுடன் வாழ்ந்தாக வேண்டிய தன் நிலையை நினைத்து வருந்திய அந்த காகம்,  அக்குழந்தை மனமுவந்து தந்த உணவாயினும் "திருடன்" என்று அவச்சொல் கூறி நிந்தித்த அந்த வீட்டின் உணவை உண்ண விரும்பாமல், தன் பசியை மறந்து தன் அலகிலிருந்த அந்த பண்டத்தை உமிழ்ந்துவிட்டு, மனம் நொந்தபடி பசித்த வயிறோடு, அங்கிருந்து கரைந்தபடி பறந்து சென்றது.

Thursday, May 10, 2018

கைபேசி.. ...

நினைவுகளின் சுவாரஸ்யங்களை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுவும் நினைவுகள் சார்ந்த பதிவின் ரகந்தான்.

அந்த காலத்தில் பொதுவாக  நட்பு மற்றும் உறவுகளுக்குள் தொடர்பென்பது கடிதங்கள் வாயிலாகத்தான். கார்டு, இன்லேன்ட் கவர்கள் இதற்கு பயன் பட்டது. கொஞ்சம் அதிகப்படியாக கதை அடிக்கும் பழக்க முள்ளவர்கள் வெள்ளைத் தாளில் எழுதி (இது அவரவர் விருப்பம். எத்தனை தாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கவர் ஒட்டி அதற்கு தகுந்த ஸ்டாம்ப் ஓட்டுவதற்கு  வசதி படைத்தவர்கள் எவ்வளவு தாள் வேண்டுமானாலும் கதைகள் எழுதலாம்.) அனுப்புவார்கள். இப்படி போய் சேரும் கடிதங்கள் இரண்டொரு நாளில் தகவலை கொண்டு சேர்த்து விடும். ஒரு திருமணம், நல்லசெய்திகள் விழாக்கள் இவற்றை பகிர்ந்து கொள்ள பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே,  உறவுகள் வெகு தூரமாயின் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் தெரிவித்து விருந்தோம்பும் பழக்கங்கள் இருந்தது. மற்றபடி உறவுகள் சந்தித்து கொண்டு அளவளாவி மகிழ்வது இந்த குறிப்பிட்ட சந்தர்பங்களில்தான். அங்கே சந்தோஷம்  அள்ள அள்ள குறையாத நதியாக பிரவாகம் எடுத்தபடி இருக்கும்.

இந்த கார்டு, கவர் போக விரைவில் தகவல் சென்று சேர வேண்டுமென்பதற்காக தந்தி முறையும் இருந்தது. ஆனால் இதை முக்கால்வாசி ஒருவர் தவறி விட்டாலோ, அல்லது, உடல் நலகுறைபாடு காரணமாக மிகவும் மோசமுற்ற நிலையில் ஒருவர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் போதோ,  என்ற அவசரத்திற்கு மட்டுமே இதை பயன் படுத்தினர்.  நல்ல விஷயங்களை  பெரும்பாலும் இது தாங்கி வருவது அரிதுதான்.

இதை கூறியதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் வசித்தது சிறுஊர்தான். (பிறந்த வீடு ) கிராமமும் இல்லா, நகரமும் இல்லா ஒரு நடுத்தரம்.  ஒரு சமயம்  உறவின் இல்லத் திருமணத்திற்கு எங்கள் அப்பா சென்று விட்டு வந்து ஒருமாதம் சென்றிருக்கும்.  ஒருநாள் நடுநிசியில் தந்திச்செய்தி வந்து அக்கம் பக்கம் அனைவரும் நித்திரையில் எழுந்து வந்து என்னவோ ஏதோ வென்று விசாரிக்க வந்து விட்டனர். அந்தளவுக்கு தந்தி என்றால் அப்போது பயம். விஷயம் ஒன்றுமில்லை... திருமணத்திற்கு வந்திருந்த ஒரு உறவு எங்கள் வீட்டிலும் பெண் இருப்பதை தெரிந்து விசாரித்த பின்,  'எனக்கு தெரிந்த விடத்தில் ஒரு நல்ல பையன் வீட்டார் இருக்கிறார்கள். அவர்களை இந்த முகவரியில் அனுகவும்' என்ற சுபச் செய்தி தாங்கி வந்திருந்த செய்தி .. பகலில் மூடிய தாளில் செய்தி வந்தால் ஒரளவு பயத்தை வெளிக்காட்டாது படித்தபின் சந்தோஷமோ, சஞ்சலமோ  எந்த உணர்வுக்கும் தயாராகலாம். அது இரவில், அதுவும் நடுநிசியில்  பேயும், நாயும் பாய் போட்டு படுத்துறங்கும் வேளையில் வந்தால், நாங்கள் பதறாமல் என்ன செய்ய முடியும்? அந்த விஷயத்தை தலை போகிற அவசரத்தோடு, அர்த்த ராத்திரி வந்து சேரும்படியாகவா  அனுப்ப வேண்டும்  அந்த சம்பவம் அருகிலிருந்தவர்கள் வாய்க்கு அவலாக பத்து நாட்களுக்கு மென்று கொண்டிருந்தனர்.  அதன் பின் அந்த உறவின் பெயரை சொன்னாலே, ஓ.. அர்த்த ராத்திரியில் அலற அடித்தவரா? என்ற பட்டப் பெயர்தான் அவருக்கு.

ஆனால், இப்போதெல்லாம் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காலம் மாறி விட்டதில், கடிதங்களின் தந்திகளின் தொடர்புகள் அறவே நின்று விட்டதோ என எண்ண வைக்கிறது. நல்லது, கெட்டது அனைத்திற்கும் தொலை பேசிதான். அதுவும் இந்த கைபேசியும், கையும் பிரிக்க முடியாத ஒட்டுதல் நட்பு ஆகி விட்டது. அது அழைத்து வரவழைத்த எங்கு சென்றலும்,((நல்லது, கெட்டது போன்ற விடங்களுக்கு தான்..) சம்பந்த பட்டவர்களுடன் அந்தந்த விஷயங்கள் குறித்து இரண்டொரு வார்த்தைகள் பேசுவது சரி,... அதன் பின் கையும், பேசியும் இணைபிரியாத நண்பர்களாகி, வேறு வேறு உறவுகளுடனோ, நட்புடனோ விவாதத்திற்கு ரெடியாகி விடுவார்கள்.

விஷேசங்களுக்காக வந்திருக்கும் குறிப்பிட்ட உறவுகளுடன் வேறு ஒரு உறவின் இல்ல விஷேடங்களுக்கு செல்லும் போது பேசிக் கொள்ளலாம் என்ற தைரியத்தையும் இந்த கைப்பேசி கற்றுக்கொடுக்கும். உயிர் இல்லாமல் கூட எப்படியோ வாழ்ந்து விடலாம் (அது எப்படி என்று கேள்வியெல்லாம் கேட்க கூடாது. உடல் தானம் என்றெல்லாம் இருக்கிறதே..)  உயிர் இல்லாவிடினும் உடல் இயங்கும்.
கைபேசி இல்லாவிடில் கைகள் இயங்காது
உயிர் போனா திருப்பி வாங்க முடியாது... கை பேசி போனா மறுபடி உடனே வாங்க லைன்னா  உயிரே போய் விடும். இதெல்லாம் கைபேசியின் புகழ் மாலைகள்... அஷ்டடோத்திரங்கள்.

இத்தனை புகழ் இதற்கு தேவையா எனக் கேட்போருக்கு, 'ஆமாம்' என்பதே என் கருத்து. ஏனெனில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல்..'  .கணினியில் எலி பிடித்து  அதன் வாலாட்டி, கீ போர்ட் அடித்து, நம் நினைவு சிதறும் போது காலாட்டி, கண்மூடி யோசித்து பதிவெழுதி பதிலெழுதி அதை தேய்க்கடித்து  அதனை விட்டு டேப்லெட் தாவி, அதுவும் டேப்லெட் போட முயற்சிக்கும் போது கைபேசியுடன் இணைந்து, பதிவுகள் பல எழுதி பல மணி நேரங்கள் தினமும் பேசியுடன், பேசாமல் பயணிக்கிறேன். அதனை வைத்து கொண்டு அதன் மூலம் பிறருடன் பேசியோ,  அதனை கீழே வைத்து விட்டு அனைவருடன் பேசவோ இயலாத ஒரு நிலையில், கைபேசி எனது கை கணினியாகிப் போனது. பின் என் புகழ் மாலைகள் கைபேசிக்கு எப்படி தேவையில்லாமல் போகும்.... கைப்பேசி என் தொல்லை பொறுக்காது கையறு நிலைக்கு வரும் முன், முதலில் கை கொடுத்த கணினி சரியாக வேண்டும். பிரார்த்திக்கிறேன். ....




Monday, May 7, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 4

                       //''டொக்'' , ''டொக்''//
      கதவை யாரோ தட்டும் ஒசை கேட்டு கதவை திறந்தான் பிரகாஷ்...
      //// வாசலில் ரேணுகா /////

             அடேடே!!!!  ''வா ரேணுகா''  மகிழ்ச்சியுடன்  வரவேற்றான் அவன்..

        அவள் புன்னகையுடன் உள்ளே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

       ''என்ன விஷயம்?? அதிசயமாய் வீடு தேடி வரும் அளவுக்கு'' அவன் சற்று படபடப்புடன் கேட்டான்.

       ''ஏன் வரக்௬டாதா?'' பொய் கோபத்துடன் சிணுங்கினாள் அவள்..

   ''அதற்காக சொல்லவில்லை, நாம் எப்போதும் வெளியில்தானே சந்திப்பது வழக்கம்... அதனால்தான் கேட்டேன்.." அவன் அவசரமாக மன்னிப்பு கோறும் பாவனையில் கூறினான்....

     ''வீடு தேடி வரவேண்டிய அவசியம் வந்திருக்கிறது. வந்தேன்..." அவள் அமர்த்தலாக சொல்லிவிட்டு சிரித்தாள்...

     ''தாராளமாக... இந்த வீட்டின் வாசல் கதவு மட்டுமின்றி என் இதயகதவும் உனக்காக.. உன் வரவுக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது... என் வீட்டில் நம்மை பற்றி கூறி அவர்கள் சம்மதத்துடனும், உன் பெற்றோர்களின் ஆசியுடனும், உன்னை இந்த வீட்டின் ராணியாக்கும் என் விருப்பத்தை உன்னிடம் எத்தனையோ முறை சொல்ல நினைத்தும், உன்னளவு எனக்கு தைரியம் இல்லாததால், சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன்...

என் தாய் என்னிடம் மனம் விட்டு பேசி என்னை தட்டிக் கொடுப்பது போல் நீயும் என்னிடம் சில சமயங்களில் அன்பாக பேசி, என் மனதில் உதிக்கும் எண்ணங்களை வரவேற்றிருக்கிறாய்... அதனால் அந்த தாயன்பு  உன்னிடம் கிடைக்குமென்று ஆசையில்,  என் தாயைப் போல் நீயும் என்னை நேசித்து அன்பு காட்டுவாய் என்ற நம்பிக்கையுடனும்,  எத்தனையோ நாள் "என்னை உனக்கு பிடித்துள்ளதா?  என்னை உன் துணையாக ஏற்றுக் கொள்வாயா?" "
என்றெல்லாம் வாய் விட்டு சொல்ல நினைத்தான் பிரகாஷ். ஆனால் இதையெல்லாம் இப்போதும் சொல்ல நினைத்தும்  வார்த்தைகள் மேலெழும்பால் எப்போதும் போல் அவன் தொண்டையிலேயே வழுக்கி விழுந்தன...

      "பிரகாஷ்! என்ன எப்போதும் ஏதோ சிந்தனை செய்த வண்ணமே இருக்கிறீர்கள்?" என்ற வண்ணம் அவன் தோளை தொட்டு உலுப்பியவள், தன் கைப்பையை திறந்து ஒரு அழைப்பிதழை எடுத்து அவனிடம் ''இந்தாருங்கள்'' என்ற வண்ணம் நீட்டினாள்...

       பிரகாஷ் தன்நினைவு பெற்றவனாய் ஏதோ ஒரு பதற்றத்துடன் அதை வாங்கி பிரித்து படித்தான்...

      திருமண அழைப்பிதழ் அது... ரேணுகாவிற்கும், முன்பின் அறிமுகமில்லாத யாரோவிற்கும்..

படிப்பும் அந்தஸ்த்தும் அந்த பையனுக்கு தன்னை விட இருமடங்குகள் உயர்வாக இருப்பதை வண்ண எழுத்துக்கள் கட்டத்திற்குள் காண்பித்தன ...

      அவன் விழிகள் குத்திட்டு நின்றன அழைப்பிதழிலில்......

      தொண்டையில்  ஏதோ  ''கப்'' பென்று அடைத்துகொண்டது போன்ற உணர்வில் தடுமாறினான்....

    ''என்ன இது?'' வார்த்தைகள் தட்டு தடுமாறி வந்தன அவன் வாயிலிருந்து.....

      ''படித்து பார்த்துமா தெரியவில்லை? என் திருமண அழைப்பிதழ்..'' அவள் கேலியுடன் அலட்சியமாக மொழிந்தாள்.

       இரவின் ஆரம்பத்தில் ''ஏ.சி.'' தியேட்டர்களிலும்,  கடற்கரை மணலிலும், அவனுடன் நெருக்கமாக அமர்ந்தபடி தோளுடன் தோள் உராய அவன் செவிகளில் ''மை டியர் பிரகாஷ்.. ஐ லைக் யூ.. உங்களை கணவராக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்...'' என்று அவள் எத்தனையோ தடவைகள் முணுமுணுத்திருக்கிறாள்... அவளை போல் வெளிப்படையாக அவன் சொல்ல முடியாமல் அந்த முணுமுணுப்பை உண்மையென்று நம்பி எத்தனை இரவுகள் உறக்கத்திலும், விழிப்பிலுமாக, கற்பனையில் ஆகாய கோட்டைகள் எழுப்பியிருக்கிறான்.  அவையெல்லாம் கற்பனையாகவே போய்விட்டதே...

      அவன் தலையில் வானம் இடிந்து விழுந்து அவனை பூமியின் அடியில்...... அதளபாதாளத்தில் அழுத்திக்கொண்டு போவது போன்ற பிரமை ஏற்பட்டது...

       "ரேணுகா, நீ என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருக்கு கழுத்தை நீட்டுவதா? இது அநியாயம்... இதற்கு நீ எப்படி சம்மதித்தாய்???" பிரகாஷ் படபடப்புடன் கேட்டான்..

    "என்ன? நான்  காதலித்தேனா??  அதவும் உங்களையா?" ரேணுகா கலகலவென்று சிரித்தாள்...

    "சந்தேகமா? எத்தனையோ நாட்கள் கூறியிருக்கிறாயே??'' குரல் கணக்க கூறினான்...

  அவள் விருட்டென்று இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்....

     ''மிஸ்டர் பிரகாஷ்! ஒரு நல்ல நண்பர் என்று இத்தனை நாள் உங்களுடன் நான் களங்கமில்லாமல் பழகியதற்கு எனக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டீர்கள்.. நான் உங்களை காதலிக்கவும் இல்லை... கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் கூறவும் இல்லை... அவசரபட்டு நீங்களே முடிவு செய்து கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.. படித்தவர் பண்புள்ளவர் என்று நினைத்து  நான் நாகரீகமாக பழகியதற்கு எனக்கு இந்த வாழ்நாள் முழுவதும் வருந்தும் அளவிற்கு செய்து விட்டீர்கள்.. இத்துடன் நமது நட்பு  முறிந்து விட்டது. இனிமேல் நாம் சந்திப்பது அநாவசியம்... என் திருமணத்திற்கு கூட உங்களை நான் எதிர்பார்க்க மாட்டேன். நான் வருகிறேன்'' என்று பொரிந்தவள், அவன் கையில் இருந்த திருமண  அழைப்பிதழை உருவிக்கொண்டு புயல் வேகத்தில் வெளியேறினாள்...

         அவன் மூச்சு விடக்௯ட சக்தியின்றி அமர்ந்திருந்தான்...

  கணவனை தவிர வேறு எவரையும் மனதால் கூட தொட்டறியாத அந்த காலத்து பெண்களுக்கு பிறக்கும் இவர்கள், இன்று கண்டவனுடன் 'காதல்' என்ற பெயரில் களியாட்டம் போட்டுவிட்டு ''அந்த'' வார்த்தையின் புனிதத்தையே கெடுக்கிறார்கள்...

   "இதற்கு பெயர் நாகரீகமாம்!!!"

     நாகரீக போர்வையில் புகுந்து கொண்டு அன்று அவன் வேலையில்லாமல் இருந்தற்காக அப்பாவும் உடன் பிறந்தவர்களும் வீண்வாதம் பேசி அவன் மனதின் வேதனையை அதிகப் படுத்தினார்கள். .

இன்று அதை போர்வையை  போர்த்திக் கொண்டு இவள் இவனிடம் காதல் வார்த்தைகளை மொழிந்துவிட்டு.. அந்த காதல் புளித்து போன நிலையில், "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' என்ற பழமொழி தவறாதபடி நடந்து கொள்ள நினைக்கிறாள்....

      கன்னிப்பெண் ஒருத்தி மிக சாதரணமாக ஒருவனிடம்,  கை கோர்த்து சிரித்துப்பேசி பெற்றோருக்கு தெரியாமல், அவனுடன் தன் மனதிற்கு பிடித்த இடமெல்லாம் சுற்றிவிட்டு பழகிவிட்டு "நாகரீகம்'' என்ற பெயரில் ஒதுங்குகிறாள்.. ஒதுக்கி விடுகிறாள்..

              '''' சே.. என்ன  நாகரீகம் ''''

         ''''நாகரீகம் என்ற இந்த வெற்று சொல்லுக்கு அர்த்தமேயில்லை....''''  அவன் மனதில் மல்லிகை மொட்டுகளாய் சிதறிய இந்த எண்ணங்களின் விளைவு கையை ஓங்கி மேஜை மேல் குத்த வைத்தது....

          மனதின் வலியோடு கைவலியும் சேர்ந்ததுதான் மிச்சம்....

 அன்று அம்மா எத்தனை உறுதியோடு துல்லியமாய் நிறுத்திப்பார்த்தது போல், பளிச்சென்று மனதில் பட்டதை சொன்னாள்...

  அவன் மனதின் கொதிக்கும் வெப்பத்தை போக்குவது போல் வாசலில் ஜில்லென்ற காற்று வீச அவன் வீட்டின் படிகட்டில் வந்தமர்ந்து கொண்டான்..

         சுருள் சுருளாக மேககற்றைகள் வானில் வந்து குவிந்து கொண்டிருந்தன...  மழை வரும் போலிருந்தது....

 அவன் எங்கோ வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.

முற்றும்.

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 123

Sunday, May 6, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 3

       "என்ன மிஸ்டர்... கண் மண் கூட தெரியாமல் என்ன ஞாபகம்??? அந்தப் பெண் தன் நெற்றியை அழுத்தமாக தேய்த்து கொண்டபடி கோபமாக கத்தினாள்....
      
        "ஐயோ" வெரி சாரி..." பதறியபடி கூறினான் பிரகாஷ்....

        "இப்படியெல்லாம், சாரி..  சொல்லிட்டா இடிச்சது சரியாயிடுமா???" அவள் கோபம் தணியாமல் ஆத்திரத்துடன்  சத்தமாக வினவினாள்.

         "மன்னித்து விடுங்கள்... ஏதோ நினைவுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். தெரியாமல் மோதி விட்டேன்.. சாரி..." அவன் தடுமாறினான்...

        "இனி ரோட்டில் நடந்து செல்லும் போதெல்லாம் இப்படி 'ஏதோ', நினைவுடன் செல்லாதீர்கள்.. அது ஆபத்து.. " அவள் கிண்டலாக கூறியதும் அவளுடன் வந்திருந்த அவள் தோழிகள், 'கிளுக்', என்று சிரித்தார்கள்...

    அவன் அவமானத்தால் சிவந்த தன் முகத்தை கைகுட்டையால் துடைத்து கொண்டு சுதாரித்து கொண்டு நிமிர்ந்து பார்பதற்குள் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாரகள்.  அவர்கள், நாகரீகம்.. என்ற பெயரில் செய்து கொண்டிருந்த அலங்கோலம் அவன் மனதை கொதிப்படைய செய்தது...

    கடற்கரை காற்று ஜில்லென்று வீசி வேலை செய்த களைப்பையெல்லாம் போக்க, மாலை நேரத்து இனிமையை ரசித்தபடி மணலில் அமர்ந்திருந்தான்.

கடலலை குழந்தைகள் சோம்பலில்லாமல்  வந்து வந்து கரையிலிருக்கும் மனிதர்களின் நாகரீகத்தை விமர்சித்து பின்னாலேயே ஓடி வரும் தன் சகாக்களிடம் சொல்லி கிண்டலடித்தபடி  குதூகலிப்பும் கும்மாளமுமாக சத்தமிட்டபடி மறுபடியும் தன் அன்னையின் மடி தேடி ஓடின.

இந்த இயற்கை, அதன் வனப்புகள்,  அதன் இயல்பான தன்மைகள், இவற்றை ரசிக்கும் மனப்பான்மை, அதிர்ந்து யேசாமல் அமைதி காக்கும்  சுபாவங்கள்,  தனக்கு ஏற்படும் சஞ்சலங்கள் எதையும் வெளிக்காட்டாமல், யாருடனும் அதிகம் பேசி யார் மனதையும் புண்படுத்தாத பாங்கு,  போன்ற குணங்கள் தன் தாயிடமிருந்துதான் தனக்கும் வந்திருப்பதாக  அவனுக்கு தோன்றியது...

இவனின் ஒதுங்கி இருக்கும் சுபாவத்தை, தானுண்டு தன் வேலையுண்டு என நினைத்து பழகும் மனப்பாங்கை ஏளனம் செய்து, இவன் நாகரீகமற்றவன், உலகம் தெரியாதவன் என்பது போல் இவனை எத்தனை நாட்கள் தந்தையும், கூடப் பிறந்தவர்களும், ஒதுக்கி வைத்து கேலி பேசி  உறவாடியிருக்கிறார்கள். படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காத சந்தர்ப்பங்கள் வேறு இவனை இன்னமும் அந்நியன் ஆக்கி இருக்கின்றன....

உள்ளத்தில் ஒன்றை நினைத்துக் கொண்டு உதட்டளவில் மற்றொன்றை பேசுவதுதான் நாகரீகமா? இல்லை..  நாளொன்றுக்கு பகட்டும், ஜொலிப்புமாக உடையணிந்து, கை குலுக்கி,  நுனி நாவில் ஆங்கிலம் பேசி மனதுக்குள் ஆயிரம் வன்மங்களுடன் அனைவரிடம் பழகுவதுதான் நாகரீகமா? தன் எதிர்பார்ப்புகளை மற்றவரிடம திணித்து, "இப்படி இல்லையேல் இந்த சமூகத்தில் உனக்கு மதிப்பில்லை... ஏன் நானே உன்னை  ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்" என மற்றவரை நிர்பந்தித்து அறிவுரை என்ற பெயரில் அசிங்கப் படுத்துவதுதான் நாகரீகமா? இதில் எது தன்னிடம் இல்லையென  இவர்கள் தன்னை அலட்சியபடுத்தினர். புரியவில்லை.. அவனுக்கு..

அந்த சமயங்களில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் துணையாக வரவில்லையென்றால், இவன் இன்று ஒரு முழுமனிதனாக உருவாகியே இருக்க இயலாது. கடலலை குழந்தைகள் கடலன்னை தேடி ஓடிய விதம் கண்டு இவனுக்கும் அம்மாவின் நினைவு வந்தது...

         "அண்ணனுக்கும் நம் உறவில் பார்த்து வைத்திருக்கும் பெண்ணைை மணம் முடித்ததும், உனக்கும் ஒரு நல்ல இடத்துலே பார்த்து மணமுடித்து விட்டால், எனக்கு கவலையில்லாமல் இருக்கும்.. எத்தனை நாட்கள் இப்படி வெளியில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்வாய்? சுதா படிப்பு முடிந்துதான் திருமண பேச்சை எடுக்க வேண்டும் என பிடிவாதம் செய்கிறாள். பார்க்கலாம்... எது நடக்கிறதென்று... என்று அவனுடன் இருந்த ஒரு வாரத்தின் ஒரு நாளில் சொல்லி வருந்திய அன்புத் தாயின் சொற்கள் நினைவுக்கு வந்தது. அம்மாதான் எத்தனை பாசமுடன் மூவரின் வாழ்வையும் பற்றி ஒரே மாதிரி  யோசிக்கிறாள் ...

ஒரிரு நாளாவது விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று வரவேண்டும். அம்மா கையால் சாப்பிட்டு அவளின் அன்பான பேச்சுகளை கேட்டு வர வேண்டும்... என்ற சிந்தனையில் மனம் மகிழ்ந்து கொண்டிருந்தவனின் காலை, மணலில் நடந்து சென்ற யாரோ... சரக்கென்று மிதிக்கவும், காலை சடாரென்று இழுத்தபடி... "யார்??" என்றபடி தலை உயர்த்தி பார்த்தவன் திகைத்துப் போனான்!!!

         "ஐயோ!!! தெரியாமல் மிதித்து விட்டேன் சாரி.." என்று பதறியது, அன்று அவனுடன் வாதடிய அந்த பெண்....

         "இனிமையான உங்கள் சிந்தனையை கலைத்து விட்டேன் போலிருக்கிறது.." அவள், மறுபடியும் ஆரம்பிக்க அவன் அன்று பட்ட அவமானத்தின் வலி நினைவுக்கு வர, "சிந்தனை கலைத்தது மட்டுமில்லை.... காலையும் நன்றாக மிதித்து விட்டீர்கள்" என்றான் சற்று எரிச்சலாக...

         "சாரி, சாரி... கவனிக்காமல்..." என்று அவள் இழுத்தாள்...."

         "இப்படியெல்லாம் சாரி, சொல்லிட்டா, மிதிச்ச வலி சரியாயிடுமா?? " என்று அவன் குத்தலாக திருப்பி கேட்டதும், அவள் வாய் விட்டு கலகலவெனறு சிரித்தாள்...

         "நன்றாக  பேசுகிறீர்களே.. உங்களை பார்த்தவுடன் அன்று பேசியது நினைவுக்கு வர உங்கள் தனிமையை பேசிப்போக்கலாம் என்று வந்தேன் கால் தடுமாறி உங்கள் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன்.. வந்தது தப்பென்றால் வந்த வழியே திரும்பி போய் விடுகிறேன்.." அவள் பொய்யாக கோபப்பட்டாள்....

        "அதெல்லாம் ஒன்றுமில்லை; சும்மா விளையாட்டாக சொன்னேன்..." பிரகாஷ் தன் இயல்பின்படி அவசரமாக தடுத்ததும், அவள் சிரித்துக்கொண்டே அவனருகில் அமர்ந்துகொண்டாள்..

            "உங்கள் பெயர்?''

        "ரேணுகா.. பி.ஏ. பைனல் இயர் படிக்கிறேன்...."

        "அழகான பெயர்! நான் பிரகாஷ்.. நானும் பி.ஏ.தான்.. ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்..."

        "அப்படியா! உங்கள் பெயரும் அழகாகத்தான் இருக்கிறது... ஏன் நீங்களுந்தான்..." அவள் ஒயிலுடன் சிரித்தாள்....

        ''அன்று நடந்ததையெல்லாம் மறந்து விடுங்கள்.. இன்றிலிருந்து நாம் நண்பர்கள்.." என்றபடி அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவன் கைகளை பிடித்து குலுக்கினாள்....

          அவன் திகைத்துப் போனான்.. ''இதுதான் இக்கால நாகரீகமோ!"

 அவன் சாமளித்துக்கொண்டு... "உங்கள் வீடு எங்கேயிருக்கிறது? உங்களுடன் உங்கள் பெற்றோர்.." என்று தயக்கத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி இழுத்தான்..

        "ம்.. எங்கள் வீடு மாமபலத்தில் இருக்கிறது.. நான்வீட்டிற்கு ஒரே பெண். அதுவும் என்அப்பா அம்மாவுக்கு செல்ல பெண். என் விருப்பத்திற்கு மாறாக எதுவுமே சொல்ல மாட்டார்கள். சுருங்க கூறினால் எங்கள் வீட்டில் நான்தான் ராணி. நான் வைத்ததுதான் சட்டம்.." மடமடவென்ற அவள் பேச்சில் கொஞ்சம் ஆணவம் மிகையாக இருப்பதாக அவனுக்கு தோன்றியது...

         "அப்படியா! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாக ௬ட இருக்கிறது.." என்றான் பிரகாஷ்.

        "இனி நீங்கள் என்னை 'நீ' என்றே அழைக்கலாம். கூடவே 'கள்' போட வேண்டிய அவசியமில்ல, எனக்கு நோ அப்ஜக்ஸன்" சிரித்த அவள் தோளை குலுக்கியபடி கூறிவிட்டு, "நான் வரட்டுமா, நாம் மறுபடியும் இனி இந்த இடத்திலேயே சந்திக்கலாம்" என்றபடி எழுந்தாள்.

         "அவனும் ஒப்புக்கு சிரித்தபடி எழுந்து அவளுக்கு விடை தந்தான். அவர்கள் நட்பு கூடிய விரைவில் நாளொரு இடமும், பொழுதொரு பேச்சுமாக, நாட்கள், வாரங்கள் மாதங்களை, துணைக்கழைத்து கொண்டு வளர்ந்தது....

ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவளது பேச்சில் மிடுக்கும், ஆணவமும்  மிகையாக தெரிந்தாலும்,  அவனின் சிந்தனைகளை செவிமடுத்து, அடிக்கடி தட்டிககொடுப்பது போல் பாராட்டவும், அவள் கொஞ்சமேனும் சளைக்கவில்லை.
தொடரும்...

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 12

Saturday, May 5, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 2

ஆச்சு.... வேலையில் சேர்ந்து இரண்டு மாதம் முடிந்து அடுத்த மாதத்தின் இறுதியை தொட்டு விடும் ஆவலில் நாட்கள்  இறக்கையை கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்தன . அவனுக்கு அம்மாவை பார்க்க வேண்டும் போல மனசு கிடந்து அடித்துக் கொண்டது....

அலுவலகத்திற்கு கொஞ்சம் அருகிலேயே தங்குமிடத்திற்கு சின்னதாக இரு அறைகளை கொண்ட ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டதால், ஒரளவு வசதியாக இருந்தது . அதனால், அம்மாவை  தன்னுடன் வந்து  ஒரு வாரமாவது தங்கிச் செல்லும்படி அழைத்தால் என்ன... என்ற யோசனை ஆசையாக அவனுள் வளர்ந்தது.

  "அன்புள்ள அம்மாவுக்கு, ஆயிரம் கோடி வணக்கங்களுடன் உன் மகன் பிரகாஷ் எழுதிக்கொள்வது... இங்கு நான் நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? எனக்கு இங்கு ஹோட்டல் சாப்பாட்டை சாப்பிட்டு, நீ பார்த்து பார்த்து வளர்த்து விட்ட நாக்கு செத்து போய் விட்டது.... உன் கையால் சமைத்த உணவை சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது.... என்ன இருந்தாலும் உன் கைபாகமே தனிதான்.... அது போகட்டும், அதைக்கூட எப்படியோ சமாளித்து கொள்கிறேன். எனக்கு உடனே உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.      நான் இந்த ஆபிஸில் சேர்ந்த புதிதாகையால் நிறைய நாட்கள் லீவு எடுக்க முடியாது... எனவே நீ எனக்காக இங்கு வந்து என்னுடன் ஒருவாரம் தங்கியிருந்து செல்வாயா??? உன் சிரமத்திற்கு என்னை மன்னித்து, எனக்காக நீ ஒருதடவை அவசியம் இங்கு தயவு செய்து வரவேண்டும். உன் வரவை என் மனம் ஒவ்வொரு கணமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது......"
                                                        
                                                                             இப்படிக்கு,
                                                                          உன்அன்புமகன்,
                                                                             பிரகாஷ்.


   இந்த கடிதம் போய் சேர்ந்த நான்கைந்து நாட்களில் அவனுடைய தாய் மீனாட்சி, எப்படியோ கணவரையும் பிள்ளைகளையும் சமாதானப்படுத்தி விட்டு அவர்கள் சம்மதத்துடன் புறப்பட்டு வந்து சேர்ந்து விட்டாள்.

 அவள் வரும் விபரம் அறிந்த அந்த நாள்  ரயில்வே ஸ்டேசனில் தாயை வரவேற்று அழைத்துவர அவன் சென்றான். தாய் பசுவை கண்ட கன்று போல் பொது இடம் என்று பாராது,  "அம்மா..." என்று சத்தமாக கூறியவாறு ஒடி வந்து அவள் கையை பற்றிக் கொண்ட போது பாசத்தின் மிகுதியில் அவன் கண்களில் நீர் வழிந்தது.... உண்மையான அன்பு பொது இடம் என்று பார்த்துக்கொண்டு வருமா என்ன!

   இவன் எவ்வளவு அன்பை மனதில் வைத்துக்  கொண்டு வெளிகாட்ட முடியாமல் தவிக்கிறான். இவனைப்போய் புரிந்து கொள்ளாமல் கண்டபடி தனக்குத்தான் பேசத்தெரியும் என்ற அகம்பாவத்தில் பேசுகிறார்களே.... என்று கணவரையும், பிள்ளைகளையும் மனதிற்குள் கடிந்து கொண்ட மீனாட்சியின் கண்களிலும் கண்ணீர் தழும்பி வழிந்தது....

              "அம்மா!" என்றபடி அவன் அவசரமாக உள்ளே நுழைந்தான்..

            "என்னடா?"

அலுவலகத்திலிருந்து  மதியத்திற்கும் முன்பாகவே திரும்பி விட்ட மகனைக் கண்டு அதன் காரணம் கேட்பதற்குள்..

          "இன்று உன்னை வெளியே அழைத்துக்கொண்டு போய் சுற்றி காண்பிக்க போகிறேன்... சீக்கிரம் புறப்படம்மா.....இன்று  உனக்காக அலுவலகத்தில் எப்படியோ ஒரு நாள் விடுமுறை கேட்டு எடுத்து வந்து விட்டேன்...

   அவன் குரலில் இருந்த ஆவலை கண்ட அந்த தாய் அவன் விருப்பத்திற்கு மறுப்பேதும் ௯றாமல் அவனுடன் கிளம்பினாள்...

  முதலில் நகரின் முக்கியமான இடங்களை சுற்றி காண்பித்தான்.. அதன்பின் ஒரு ஏ.சி. தியேட்டரில் ஒரு புதிய படம்...  பிறகு ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பாடு.... அதற்கு பிறகு, நல்ல உயர்ரக துணிக் கடையொன்றில் அம்மாவுக்கு பிடித்த கலரில் வறுப்புறுத்தி ஒரு புடவை  எடுத்துக்கொடுத்தான்...

   எல்லாவிடங்களிலும் அவனுக்கு ஈடு கொடுத்தாள் அவன் அம்மா......  வீடு திருப்பிய பின் ஆர்வமாய் அம்மாவிடம்.... "அம்மா எப்படிம்மா ஊரெல்லாம்??? ஜாலியா பொழுது போச்சில்லே....." உனக்கு பிடித்திருந்ததா?  என்றான் பிராகாஷ்..

 "நீ ஆசையாய் வாங்கி கொடுத்த புடவை மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்திச்சிப்பா... மத்தபடி நீ கூட்டிகிட்டு போன இடத்திலெல்லாம் பொழுது நல்லாதான் போச்சு... இருந்தாலும் எம்மனசுலே பட்டதைசொல்லேறேன்.. ஒரு கோவிலுக்குபோய் சுத்திட்டு ஐம்பது பைசாவுக்கு கற்பூரம் பொருத்தி வைச்சா ஏற்படற நிம்மதி, ஒரு சந்தோசம், இதுலே இல்லையேப்பா.... இதுக்குத்தான் சொல்றது இந்த கால நாகரீகத்திற்கு அர்த்தம் இல்லைனு......''

         அம்மா பேச, பேச, அவன் வியந்து போனான்..

        அம்மா எப்படி இந்த கால நாகரீகத்தை நாசூக்காய் சுட்டிக்காட்டி விட்டாள்... அம்மாவை நினைக்கும் போது அவனுக்கு மனம் முழுக்க பெருமிதமாக இருந்தது.....

தொடரும்...

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 1

Thursday, May 3, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை


 கதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி எழுதிய கதைகள் மற்றவர்களையும் ஈர்க்க வேண்டுமென்றுதான் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த கதைகள் நான் என் இளவயதில் எழுதியவை. இவை அந்தளவிற்கு படிப்பவரின் மனதை ஈர்க்குமா என்று தெரியாததால் வாளாவிருந்து விட்டேன்  அதன் பின் குடும்பம் என்ற சூழ் நிலையினால் எழுத்தார்வத்தில் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை. தற்போது வலைத்தள உறவுகளின்   ஊக்குவிப்பால் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இன்னமும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை நல்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்..

இது எழுத துவங்கிய காலத்தில் 76 களில் எழுதியதால் அப்போதைய சூழலை மையமாக கொண்டு என் கற்பனையில் வடித்தவை.  குற்றம் குறை இருப்பின்  இப்போதைய எனக்காக அவைகள் சகிக்கப் படும் என நம்புகிறேன். 

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை

            சுருள்சுருளாக மேகக்கற்றைகள் வானில் வந்து குவிந்து கொண்டிருந்தன. மழை வரும் போலிருந்தது. அவன் தன் வீட்டு வாசல்படியில் அமர்ந்தவாறு எங்கோ வெறித்து நோக்கி கொண்டிருந்தான். அவனை பார்த்தாலே அலட்சியமாய் தோள்களை குலுக்கிகொண்டு முகத்தை சுளித்துக்கொள்ளும் அண்ணன் சதீஷ்..... மூத்த அண்ணன் தனக்கு தேவையானதை கேட்டதும் வாங்கித்தருகிறான் என்ற திமிரில், கர்வத்தில், நீ எனக்கு இதுவரை எதுவுமே வாங்கி தந்ததில்லையே; பணமாக தர வேண்டாம், அட்லீஸ்ட்  அதை வைத்துக் கொள்ள ஒரு பர்ஸ் ௬ட வாங்கித் தரமாட்டேங்கிறியே பிரகாஷ் அண்ணா... என்று அவன் வேலையில்லாமல் வீட்டிலிருப்பதை நா௲க்காய் கேலியாக குத்திக் காட்டும் கல்லூரியில் படிக்கும் தங்கை சுதா...  வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் இவனை பி.ஏ.வரை படிக்க வச்சேன். தண்டம்... ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டிலே தண்டசோறு சாப்பிட்டு கிட்டு வேலைவெட்டியில்லாமே, உட்கார்ந்து கொண்டிருக்கிறான், என்று அவன் காது படவே கண்டபடி கேவலமாக பேசும் அப்பா நாகராஜன்... இவர்களை நினைத்தாலே, உலகத்தின் மீதே ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது அவனுக்கு.

இந்த வேலையில்லாத திண்டாடத்தில் சிக்கி திணறும் எத்தனையோ பேர்களுக்கு நடுவில் அவன் தானும் ஒருவனாய் இருப்பதை நினைத்து வருந்தாத  நாளில்லை... ஆனால் அதை புரிந்து கொண்டு அவனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தை  பேச யாருமில்லை.... யாருக்கும்
மனமில்லை என்பதை உணர்ந்து கொண்டவனாய், அவன் தினமும் தன் படிப்பு சான்றிதழ்களுடன் ஒவ்வொரு அலுவலகமாக ஏறி, இறங்கி கொண்டுதான் இருக்கிறான். ஆனால், இன்னமும் ஒருவேலைதான் கிடைத்தபாடில்லை....

            "ஏண்டா... இப்படி அடிக்கடி மோட்டுவளையத்தை பாத்துகிட்டு உட்காந்திருக்கே... படிச்சவனுக்கு வேலை கிடைக்காமலா போயிடும்.... அல்லது, கிடைக்கிறதும், கிடைக்காமலிருப்பதும் நம் கையிலா இருக்கு. நீ கவலைபட்டு ஒடம்பெ கெடுத்துகாதே... சாப்பிட வா.. உனக்கு பிடிச்ச வெண்டைக்காய் கறி பண்ணியிருக்கேன்" என்று அவனை அன்புடன் சமாதானம் செய்து பரிவுடன் பார்த்து பாரத்து பரிமாறிஅவனை சாப்பிடவைக்கும் அவனின் அன்புமிகுந்த தாய் மீனாட்சி... அவளை நினைத்தாலே அவன் மனம் பாகாய் உருகி கண்களில் கண்ணீரை கசிய வைத்தது.... அந்த அன்புச்சொற்களை கேட்கும் போதெல்லாம் அவன் உடலும் உள்ளமும் எத்தனையோ நாட்கள் சிலிர்த்திருக்கின்றன. அந்த அன்பில் அவன் தந்தை, உடன் பிறந்தவர்கள், பிற உற்றார் உறவினர்கள் அனைவரும் கொஞ்சம் ௬ட நாகரீகமில்லாது பேசும் கேலி பேச்சுக்ககைள மறந்திருக்கிறான். சொல்ல போனால் அம்மாவுகாக எப்படியாவது ஒரு வேலை தேடிக்கொண்டு இவர்கள் எதிரில் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறி அவன் மனதில் ஆழ பதிந்திருந்ததால்  அவன் சோர்ந்து விடாமல் வேலை தேடிக்கொண்டிருந்தான்......

              "கடவுளே... அந்த அன்பு தெய்வத்திற்காகத்தான் நான் இந்த உலகில் உயிரை வைத்திருக்கிறேன்... இல்லாவிட்டால் என்றோ உன்னை வந்தடைந்திருப்பேன்..." என்று கோவிலில் இறைவனின் முன்பு அவன் உருகிய நாட்கள் எத்தனையோ....
               கடவுளின் கருணையினாலோ என்னவோ அன்று அவனுக்கு வேலை கிடைத்திருப்பதாக, இருபது நாட்களுக்கு முன்பு  நேர்முக தேர்வுக்கு போன ஒரு அலுவலகத்திலிருந்து, தகவல் வந்திருந்தது... அவன் மிகுந்த சந்தோஷமடைந்தாலும் வீட்டில் அவன் எதிர்பார்த்த உற்சாகம் அமையவில்லை. அதுதான் அவனுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.... அப்பாவிடம் வேலை கிடைத்திருப்பதை அவன் சொன்ன போது.... "ம்... இவ்வளவு மட்டுக்காவது தண்ட சோறு சாப்பிடுகிறோம் என்ற உணர்வு வந்ததே உனக்கு.." என்று அலட்சியமாக ௬றிவிட்டு, "அறிவுரை" என்ற பெயரில் அவனை கொஞ்சம் புண்படுத்திவிட்டு, அவன் பதிலை எதிர்பாராது அப்பால் நகர்ந்தார். சதீஷிடமிருந்தும், சுதாவிடமிருந்தும் அவனுக்கு கிடைத்தது அந்த மாதிரி அலட்சியமான வார்த்தைகள்தான்.... அவன் இதை எதிர்பார்க்கவில்லை.... வேலை கிடைத்த பிறகாவது அவர்கள் தன்னை அன்புடன் பாரப்பார்கள்.. தன்னிடம் அன்புடன் பேசி மனம் மகிழும்படி நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவர்கள் அவனை புரிந்து கொள்ளாமல், அன்பை வெளிப்படுத்துவது அநாகரீகம் என்பது மாதிரி நடந்து கொண்டது அவன் மனதை காயபடுத்தியது..... வழக்கபடி தாய் மீனாட்சிதான் தன் அன்பால் அவனை திளைக்க செய்து அவன் வேலையை ஒத்துக்கொள்ள செல்லும் ஊருக்கு அனுப்ப மனமில்லாமல் ஆசி கூறி அனுப்பி வைத்தாள்....
தொடரும்....